தமிழகத்தை பாஜகதான் ஆளுகிறது! அப்பாவு குற்றச்சாட்டு!
திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியை அமைக்க பாஜக முயற்சி.. அப்பாவு விமர்சனம் குறித்து..
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், தற்போது நடிகர் தனுஷையும் பாஜக வளர்த்துவிடுவதாகவும் முன்னாள் அவைத்தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழக அரசின் செயல்பாடுகள், மின்துறை, குடிநீர்த் திட்டங்கள், அரசு மருத்துவமனைகள், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
Advertisement
Advertisement
தனுஷையும் பாஜக வளர்க்கிறது..
திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியைத் தமிழகத்தில் அமைக்க பாஜக முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பின்னால் பாஜக இருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருவதாகத் தெரிவித்தார். நடிகர் தனுஷை அரசியலுக்கு வரவழைத்து, அவரை முன்னிறுத்தி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகக் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகக் குற்றச்சாட்டு..
கடந்த திமுக ஆட்சியில் ராதாபுரம் பகுதியில் களக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏழு பேரூராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க ரூ. 423 கோடி ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து சுத்திகரித்து வீடுகளுக்கு வழங்கும் திட்டம் தற்போது முடங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
வள்ளியூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் 160-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், ராதாபுரம் அருகே ரூ.15 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானப் பணிகளும் முடங்கியுள்ளதாகவும் கூறினார். இப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்ததாகவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.
மின்துறை, ஸ்மார்ட் மீட்டர் குறித்து விமர்சனம்
மின்சாரக் கொள்முதல், மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், மின்துறையை அதானியிடம் ஒப்படைக்கும் நோக்கில் செயற்கையான மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டம்–ஒழுங்கு, ஊழல் குறித்தும் கேள்வி
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரம், போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். அரசு வழக்குரைஞர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ராதாபுரம் தொகுதியில் குவாரிகள் தொடர்பாகத் தன் மீதும் குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அப்பாவு, சட்டவிரோதத் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கேரளத்துக்குக் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இவ்வாறு தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அப்பாவு, அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தனது விமர்சனங்களைப் பதிவு செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.