வாய் மட்டும்தான் வேலை செய்யுது! 'போக்கிரி' பட வசனத்தைக் குறிப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்!
சிறைக் கைதிகள் தப்பிச் செல்வது, டிவி சீரியல்போல் தொடர்கதை ஆகியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கோவை சிறையில் இருந்தும் கைதி தப்பியோடியது குறித்து தவெக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலிருந்து ஈரோட்டைச் சேர்ந்த ராகவன் என்ற கைதி நேற்று தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புழல், தேனி மாவட்ட சிறை ஆகியவற்றைத் தொடர்ந்து கோவை சிறையில் இருந்தும் கைதி தப்பியோடியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இதுபற்றி இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கோவை சிறைச் சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது, சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
“வெற்றி ஆட்சி சாதனை மலரில்” சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.
தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக் கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம். இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற முதல்வர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.
அது எப்படி கைதிகளால், சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது? இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது, சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?
அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக் கூடாது என்று அறிவுறுத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
AIADMK General Secretary Edappadi Palanisami on prisoner escaped from coimbatore central prison
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.