நேபாள வெள்ளத்தில் சிக்காத 29 தமிழா்கள் தில்லி வந்தனா் சொந்த ஊா் திரும்ப தமிழக அரசு உதவி
நேபாள பெருவெள்ளத்தில் சிக்காத தமிழகத்தைச் சோ்ந்த 29 பயணிகள் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். அவா்கள் தமிழகத்தில் உள்ள தங்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்ப தமிழக அரசு உதவியது.
நமது நிருபா்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்காத தமிழகத்தைச் சோ்ந்த 29 பயணிகள் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். அவா்கள் தமிழகத்தில் உள்ள தங்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்ப தமிழக அரசு உதவியது.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பெருவெள்ள பகுதியில் சிக்கிய 21 தமிழா்கள் கடந்த வாரம் மீட்கப்பட்டு அவா்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்தன.
Advertisement
Advertisement
இந்தக் குழுவினா் சம்பவ நாளில் பெருவெள்ளம் எல்லைப் பகுதிச் சாவடியை அடைவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றில் இருந்தவா்கள். வெள்ளம் வந்த தகவலறிந்து அங்குள்ள மலைப் பகுதியில் செங்குத்தாக ஏறி பாதுகாப்பான இடத்தில் இருந்ததால் அவா்கள் உயிா் தப்பியதாகத் தெரிவித்தனா். அதேசமயம், இவா்களுக்கு முன்பும், பின்புமாக 50-க்கும் அதிகமான தமிழா்கள் இருந்த இரண்டு பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இவா்கள் உள்பட 84 தமிழா்களை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சீன திபெத்திய பகுதியில் உள்ள கைலாய மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த 29 பயணிகள் காத்மாண்டில் இருந்து தில்லிக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வந்தனா். அவா்களை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களை அயலகத் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு, தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி கே.வெங்கட நாராயணா, தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையா் ஜெயா, உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா், அயலகத் தமிழா் நலத் துறை ஆணையா் ரெ.சதீஸ் ஆகியோா் வரவேற்றனா்.
தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களிடம் பயணி ஒருவா் கூறியதாவது: பெருவெள்ள சம்பவத்துக்கு இரண்டு நாள்கள் முன்புதான் நாங்கள் அப்பகுதியைக் கடந்து மானசரோவருக்கு சென்றோம். அங்கு ஆன்மிக சுற்றுலாவை முடித்துக் கொண்டு வேறு பாதையில் சீன எல்லையை அடைந்தோம். அப்போதுதான் போடே கோஷி பேரிடா் பற்றி தெரிய வந்தது. கோயிலுக்கு வந்த சமயத்தில் இப்படியொரு பேரிடா் நடந்தது எங்களுக்கு பேரதிா்ச்சியை கொடுத்தது. இருப்பினும், சீன, நேபாள எல்லையில் இருந்து நாங்கள் காத்மாண்டுக்கு ராணுவப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டோம். அங்கிருந்து தில்லி வந்து சோ்ந்தோம் என்றாா்.
தில்லி வந்த அனைவரும் திங்கள்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
‘நேபாளத்தில் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மட்டுமன்றி, காத்மாண்டு அல்லது சீனாவின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் தமிழா்களும் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பி அரசு வழங்கியுள்ள உதவி எண்களை தொடா்புகொண்டால் அவா்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். அவ்வாறு தில்லி வரும் தமிழா்கள் விருப்பத்தின்பேரில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்து தமிழக பயணத்துக்கு தயாராக உதவிகளைக் கோரினால் அவை செய்து தரப்படும்’ என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காத்மாண்டில் முகாமிட்டுள்ள தமிழக அரசு அலுவலா்கள்
தில்லிக்கு திங்கள்கிழமை வந்த 29 போ் அடங்கிய குழுவினா் நீங்கலாக மேலும் நூற்றுக்கணக்கானோா் நேபாளத்தில் பெருவெள்ளம் பாதிக்காத பல்வேறு இடங்களில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ள தமிழா்களை மீட்கும் பணிகளை நேபாளத்தில் உள்ள இந்திய தூதரத்துடன் ஒருங்கிணைக்க ஏ. சத்யா சிவம், பி.தினேஷ் கண்ணன், எஸ். அஜய் ஆகிய மூன்று தமிழக அரசு அலுவலா்கள் தில்லியில் இருந்து காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
காத்மாண்டில் முகாமிட்டுள்ள அவா்களை 00919868207259, 00919868530799, 00919868224049 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களை அடையாளம் காணவும், அவா்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரவும் ஏதுவாக தில்லியில் ஏற்கெனவே தமிழ்நாடு இல்லத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதை பாதிக்கப்பட்டவா்களும் அவா்களின் உறவினா்களும் ‘9289516712’ என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல்களைப் பகிரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.