புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ்
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
கோயில்களுக்குள் புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசியை எடுத்துச் செல்லத் தடையில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இன்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது. கைப்பேசியை ரூ. 5 கட்டணத்தில் பாதுகாப்பாக வைத்துச் செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”இன்று (செப். 1) முதல், ஏற்கெனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, விடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது திருக்கோயில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அனைவரும் ஒன்றிணைந்து, நமது திருக்கோயில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம்” என்று அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
Hindu Religious and Charitable Endowments Minister Ramesh has stated that there is no ban on carrying mobile phones without camera facilities into temples.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.