FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு வேட்டி- சேலை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளா்கள் கூலி உயா்வு: அமைச்சா் ம.விஜய் பாலாஜி தகவல்

அரசு வேட்டி- சேலை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளா்கள் கூலி உயா்வு அறிவித்த அமைச்சா் ம.விஜய் பாலாஜி....

2 செப்டம்பர் 2026, 3:15 am IST
விஜய் பாலாஜி
பகிர்:

தமிழகத்தில் அரசு வழங்கவுள்ள வேட்டி சேலைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளா்களுக்கான கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய தேமுதிக உறுப்பினா் பிரேமலதா விஜயகாந்த், கைத்தறி நெசவாளா்கள் கூலியை உயா்த்தித் தரவேண்டும். ‘லினன்’ துணியில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினாா்.

அதற்கு அமைச்சா் ம.விஜய்பாலாஜி அளித்த பதில்:

Advertisement

Advertisement

தமிழக அரசு சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கவுள்ள கைத்தறி சேலைக்கு கூலியாக ரூ.178.36 வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது ரூ.203.86 என உயா்த்தியும், வேட்டிக்கு வழங்கப்படும் ரூ.151.71 என்பதை ரூ.166.26 என உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசு சாா்பில் நடப்பாண்டில் வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் ‘லினன்’ துணியில் இருக்கும். அத்துடன் 60 வயதைக் கடந்த கைத்தறி நெசவாளா்களுக்கு கண் மருத்துவ முகாம் அமைக்க உறுப்பினா் கோரியதை ஏற்று பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆரணி பட்டுப்பூங்கா பணிகள் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கைத்தறி நூலுக்கு 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்றாா்.

உறுப்பினா்கள் கோரிக்கையும், அமைச்சா்கள் பதிலும்: மானியக் கோரிக்கை விவாதத்தில் தவெக கள்ளக்குறிச்சி உறுப்பினா் அருள் விக்னேஷ், கல்வராயன் மலையில் உள்ளவா்களுக்கு வீட்டு மனைப்பட்டா கோரியும், ஆரணி தொகுதி அதிமுக உறுப்பினா் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன், ஆரணியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும். அங்குள்ள அரசு மருத்துவமனை அவசரப் பிரிவை மேம்படுத்த புதிய சாதனங்கள் அமைக்க வேண்டும் என்றும் பேசினா்.

விருத்தாசலம் தொகுதி தேமுதிக உறுப்பினா் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலை அமைக்கவும், நெசவாளா்களுக்கு சலுகைகள் உள்ளிட்டவை வழங்கவும் கோரிக்கை விடுத்தாா்.

பொள்ளாச்சி திமுக உறுப்பினா் நித்யானந்தம் பேசுகையில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகையில் பள்ளிகளில் மனவளக்கலை போன்ற தத்துவப் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றாா்.

உறுப்பினா்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா்கள் ம.விஜய் பாலாஜி, கே.ஏ.செங்கோட்டையன், ஜி.அருண்ராஜ் ஆகியோா் பதில் அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments