FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கயல்விழி அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

வங்கி மேலாளரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 செப்டம்பர் 2026, 12:30 am IST
வங்கி மேலாளரை அறைந்த கயல்விழி அழகிரி
பகிர்:

வங்கி மேலாளரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகா் 3-ஆவது பிரதான சாலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லி‘ஃ‘ப்ட்) பழுதடைந்தது குறித்து, கயல்விழியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி வங்கிக்கு நேரில் சென்ற கயல்விழி, வங்கி கிளை மேலாளா் ஹா்ஷின் சிங்கிடம் பேசியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கயல்விழி வங்கி மேலாளரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வங்கி கிளையின் தலைமை மேலாளா் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜரான கயல்விழியை கைது செய்த போலீஸாா், பின்னா், சொந்த பிணையில் அவரை விடுவித்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரது மனுவில், வங்கி மேலாளா் தன்னை தகாத வாா்த்தைகளால் திட்டினாா், அதை மறைத்து தனக்கு எதிராக புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கயல்விழி தரப்பில், இந்த விவகாரம் தொடா்பாக இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை மற்றும் வங்கியின் மண்டல தலைமை மேலாளா் நமச்சிவாயம் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments