FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...

5 செப்டம்பர் 2026, 11:04 am IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது. சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும், ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம் தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.

இந்தியாவில் கடைசியாக 1931 ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பாமக உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக 95 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் சாதி விவரத்துடன் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த பணி தொடங்கவுள்ளது.

Advertisement

Advertisement

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு பாமக தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த முறைக்கு பதிலாக சாதிவாரி கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்படும் செயலியில், மத்திய அல்லது மாநில அரசுகளின் சாதிகளை பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்கச் செய்து, பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று பாமக வலியுறுத்தியது. இது தொடர்பாக ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து காங்கிரசும் இப்போது பாமகவின் நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.

இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்திருக்கும் மத்திய அரசு அதிகாரிகள், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முன்பாக, சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தான் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இருப்பவை சாதிகள் அல்ல... வகுப்புகள் எனத் தெரியவந்தது. பிச்சை எடுப்பவர்கள், உள்ளூரில் பிறந்தவர்கள் என்பன உள்ளிட்ட பிரிவுகள் ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை சாதிகள் அல்ல, வகுப்புகள். இதனால் எந்த குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால் தான் பட்டியலை இணைப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டு எழுதும் முறை பின்பற்றப்படுகிறது" என்று தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளின் இந்த வாதம் ஏற்க முடியாதது.

இந்தியாவின் முதல் ஓபிசி பட்டியல் 1955-ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டவையாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. காகா கலேல்கர் உருவாக்கிய பட்டியலில் முழுக்க முழுக்க சமூகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அதன்பின் 1980&ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் தேதி மண்டல் தலைமையிலான இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஓபிசி பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 3743, 1937 என உயர்த்தப்பட்டிருந்தது. அதற்கு காரணம், சாதியின் அடிப்படையில் மட்டுமின்றி சில தொழில் பிரிவினரையும், நாடோடிக் குழுக்களையும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓபிசி பட்டியலில் மண்டல் ஆணையம் இணைத்தது தான்.

ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளூரில் பிறந்தவர்கள் என்ற வகுப்பினர் அந்தமான் தீவுகளுக்கான ஓபிசி பட்டியலில் 2011 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு. திருநங்கையர் என்பது சாதியின் பெயர் அல்ல. அது மூன்றாம் பாலினம் ஆகும். ஆனால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று 2012 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் சாதிகளைக் கடந்தும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவது தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் படுவதன் நோக்கமும் சமூகநீதி வழங்குவது தான். அவ்வாறு இருக்கும் போது, சில வகுப்புகளை சாதிகளாக பட்டியலிட்டு பதிவு செய்வதால் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடாது. அந்த வகுப்புகள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப் பட்டதன் நோக்கம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி பயன்களை வழங்குவதற்காகத் தான் என்பதால், அவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அவர்களை சாதிகளாகவே பதிவு செய்வதில் தவறு இல்லை. அவ்வாறு செய்வதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் சிதைந்து விடாது.

அதே நேரத்தில் சில வகுப்புகளை சாதிகளாக பதிவு செய்யக் கூடாது என்பதற்காக, சாதியின் பெயரை மக்களிடமே கேட்டு பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டால், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4147 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவரும். இது தான் சாதிவாரி மக்கள்தொகையின் நோக்கத்தையே சிதைத்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதாக அமைந்து விடும். இது சமூகநீதிக்கு வலிமை சேர்க்காது.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின் பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்; இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ ஆணை S.O. 4505(E) -ஐ ரத்து செய்து விட்டு, புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

This is merely a weak justification being offered to defend the Centre’s position, and it is not an acceptable argument.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments