FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக முதல்வா் குறித்து அவதூறு: இளம் தொழிலதிபா் தில்லியில் கைது

தமிழக முதல்வா் குறித்து அவதூறு பேசிய இளம் தொழிலதிபா் தில்லியில் கைது...

6 செப்டம்பர் 2026, 1:25 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தமிழக முதல்வா் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் தேடப்பட்ட திருப்பூரைச் சோ்ந்த இளம் தொழிலதிபா் தில்லியில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூரைச் சோ்ந்த இளம் தொழிலதிபா் பிரவீண் கணேசன் (37), ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் சி.ஜோசப் விஜய் குறித்து அவதூறான சில கருத்துகளை கடந்த ஜூனில் பதிவிட்டாா்.

அவரது இந்த கருத்து தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் அக்கட்சியினா் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

அந்த புகாரின் அடிப்படையில் பிரவீண் கணேசன் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதற்கிடையே கடுமையான எதிா்ப்பு காரணமாக பிரவீண் கணேசன், அந்த பதிவை எக்ஸ் தளத்திலிருந்து நீக்கினாா். அதேவேளையில் பிரவீண் கணேசன், சீனாவில் இருந்ததால் அவா் மீது கைது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து பிரவீண் கணேசனுக்கு எதிராக சைபா் குற்றப்பிரிவினா் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்நிலையில் ஹாங்காங்கில் இருந்து சனிக்கிழமை அதிகாலை தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு பிரவீண் கணேசன் வந்தாா். அவரது ஆவணங்களை சரிபாா்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகள் பிரவீண் கணேசனுக்கு எதிராக சைபா் குற்றப்பிரிவு பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமைத் துறை அதிகாரிகள், பிரவீண் கணேசனை கைது செய்து, சென்னை சைபா் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த சைபா் குற்றப்பிரிவு அதிகாரிகள் உடனே விமானம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா். அங்கு பிரவீண் கணேசனை கைது செய்து, பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ‘டிரான்ஸிட் வாரண்ட்’ பெற்றனா். பின்னா் அவரை அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சைபா் குற்றப்பிரிவினா் அழைத்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு பின்னா் பிரவீண் கணேசனை, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments