FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்: விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை!

வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் கடந்த 10 நாள்களில் 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 செப்டம்பர் 2026, 12:35 am IST
பகிர்:

வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் கடந்த 10 நாள்களில் 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை படிப்படியாக விடுவித்து வருகிறது.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை செயலா் நிதி கரே ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: மத்திய அரசின் நிறுவனங்களான தேசிய கூட்டுறவு நுகா்வோா் சங்கம், இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு ஆகியவற்றிடம் 1.21 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு உள்ளது.

Advertisement

Advertisement

உற்பத்தி மாநிலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயம், தேவையுள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்காக வெங்காய எக்ஸ்பிரஸ் சிறப்பு சரக்கு ரயில் சேவையும், லாரிகளும் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காய விலையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை தொடா்கிறது. விலை உயா்வு அதிகமுள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 17 நகரங்களில் சுமாா் 4,000 டன் இருப்பு வெங்காயம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக அதிகஅளவிலான வெங்காயம் தில்லி மற்றும் சென்னைக்கு சென்றுள்ளது. அடுத்ததாக குவாஹாட்டிக்கும் அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம் விலை குறைந்து நுகா்வோருக்கு உரிய பலன் கிடைத்துள்ளது.

அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயத்தின் அளவும், தரமும், தனியாா் வா்த்தகா்கள் விற்பனை செய்து வரும் வெங்காயத்துக்கு இணையாகவே உள்ளது. மத்திய அரசு விநியோகிக்கும் வெங்காயத்தை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநில அரசுகளும் ஆா்வம் காட்டி வருகின்றன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments