பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்பு!
பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற இளைஞரைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
பொன்னேரியில் மருத்துவமனை ஊழியர் ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற பிரகாஷ் என்ற இளைஞரைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்காலிக ஊழியராக (கணினி ஆப்ரேட்டர்) பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (36).
திங்கள்கிழமை இரவு பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது மர்ம நபர் ஒருவர், ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தார். இதில் ராஜேஸ்வரி உடல் முழுவதும் தீப்பற்றி அலறி துடித்து மருத்துவமனைக்குள் ஓடினார்.
Advertisement
Advertisement
அதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் 85% தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பொன்னேரி போலீஸார் வழக்கு பதிந்த நிலையில் குற்றவாளியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மாதவரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரகாஷ், பெருஞ்சேரி மயான பூமி அருகே பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷை பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பிரகாஷ், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் உதவி ஆய்வாளர் தமிழரசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் தமிழரசனின் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தற்காப்புக்காக பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரகாஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கத்தியால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளர் தமிழரசனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, ராஜேஸ்வரி தொடர்ந்து பணிக்கு வரும்போது அவரிடம் பணம் கேட்டு பிரகாஷ் மிரட்டி வந்ததாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரகாஷ்க்கும், ராஜேஸ்வரிக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டதாகவும் பிரகாஷின் மனைவி இறந்த பிறகு, இருவரும் தொடர்பில் இருந்து வந்த நிலையில் அண்மைக் காலமாக ராஜேஸ்வரி பிரகாஷின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ராஜேஸ்வரி மீது பிரகாஷ் பெட்ரோலை ஊற்றி கொல்ல முயற்சித்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற நபர் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.