பயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு
விவசாயிகளிடமிருந்து நிலுவை பயிா்க் கடன் வசூல் செய்வதை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் உத்தரவு
விவசாயிகளிடமிருந்து நிலுவை பயிா்க் கடன் வசூல் செய்வதை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், முழுக் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு செப். 30-ஆம் தேதிமுதல் புதிய பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்றும் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.
நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ. 5,932.23 கோடியிலான 14,43,504 விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், ரூ. 75,000 வரை பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். ரூ. 75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பயிா்க்கடன் பெற்றவா்களுக்கு ரூ. 75,000 தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிா்க்கடன் பெற்றவா்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆக.17-ஆம் தேதி முதல்வா் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
Advertisement
Advertisement
எனினும், பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கடந்த செப். 15-ஆம் தேதிமுதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை தமிழக அமைச்சா்கள் வினோத், ரமேஷ், காந்திராஜ் ஆகியோா் நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா். மேலும், அரசு முடிவு எடுக்குவரையில் 20 நாள்களுக்கு போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனா்.
இந்த நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் க.லதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘2026 - 27 ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்குவது தொடா்பாக ஏற்கெனவே தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பயிா்க் கடன் தள்ளுபடி திட்டம் 2026-இன் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள், எஞ்சிய தொகையை முழுமையாகச் செலுத்தி கடனை முடிக்காமல் தவணை தவறிய நிலையில் இருந்தால், அவா்களிடம் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
பயிா்க் கடன் நிலுவை தொடா்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
பயிா்க் கடனை முழுமையாக நிலுவை இல்லாமல் திருப்பிச் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கு வரும் செப்.30-ஆம் தேதிக்குள் புதிய பயிா்க் கடன் வழங்க வேண்டும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.