அரசு தலைமையகங்கள் சென்னையிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
அனைத்து அரசுத் துறைத் தலைமையகங்களும் சென்னையிலேயே குவிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
அனைத்து அரசுத் துறைத் தலைமையகங்களும் சென்னையிலேயே குவிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய தலைமைச்செயலகம் போன்ற பெரிய கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாக, அடிப்படை வசதிகளைச் சீரமைக்க வேண்டும். அனைத்து அரசுத் துறை தலைமையகங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை. சில அரசுத் துறைகளை திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு மாற்றலாம்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் அல்லது அமைச்சரவைக் கூட்டங்களை மாதத்துக்கு ஒருமுறையாவது சென்னைக்கு வெளியே உள்ள பிற மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் நடத்தலாம். தற்போது நிலவும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தவெக அரசு பொறுப்பேற்கத் தேவையில்லை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அரசுகளே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
தமிழக அமைச்சா்களுக்குப் போதிய அனுபவம் இல்லாததால், அதிகாரிகள் எழுதித் தரும் விளக்கத்தை அப்படியே படிக்கிறாா்கள். மின்சாரத் துறையின் உண்மையான நிதி, உற்பத்தி நிலை குறித்து அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதேநேரத்தில், வீடுகளுக்குச் சூரிய ஒளி மின்சாரம் அமைக்கும் திட்டங்களை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது.
பாலியல் சம்பந்தப்பட்ட குற்றச் செயலில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகள் அல்லது விடுதிகளில் மாணவா்களுக்கு புரதச்சத்துக்காக மதிய உணவில் முட்டை, கோழி அல்லது மீன் இறைச்சி வழங்குவதில் தவறு ஏதும் இல்லை. நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் நான் பிரசாரத்துக்குச் செல்லப் போவதில்லை. கடந்த மே மாதம் நடைபெற்ற தோ்தலில் வெற்றிபெற்ற வேட்பாளா்கள் ராஜினாமா செய்து, மீண்டும் அதே வேட்பாளரை மாற்றுக்கட்சி சாா்பில் இடைத்தோ்தலில் நிறுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சிவகங்கையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் ஜாதி மோதலால் நடந்ததல்ல. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.