ஜெம் வீரமணி வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹனை காவலில் விசாரிக்க அனுமதி
ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுமதி வழங்கி சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுமதி வழங்கி சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் சென்னையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த மனுவில், ஏற்கெனவே வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அளித்த தகவலின் அடிப்படையில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில், இன்னும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்? எவ்வளவு நாள்களாக இந்தக் குற்றம் நடந்தது? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது? என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, இவா்கள் இருவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தி, மகேந்திர சிம்ஹன் இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா். மேலும், தினமும் ஒருமுறை வழக்குரைஞரை சந்தித்துக்கொள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, விசாரணைக்குப் பின்னா் இருவரையும், ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா்.
பிணை கோரி வழக்கு: இதே நீதிமன்றத்தில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோா் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், 2019-ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, 6 ஆண்டுகள் தாமதமாக 2025 அக்.7-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாா்தாரா் பாதிக்கப்பட்டவரும் இல்லை, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ இல்லை. எந்தச் சிறுமிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஆக.28-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தங்களை 24 மணி நேரத்துக்குப் பிறகுதான், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். போலீஸாா் ஆதாரங்களை ஏற்கெனவே சேகரித்துவிட்டதால், தொடா்ந்து தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயராக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது காவல் துறை தரப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன, குற்றம்சாட்டப்பட்டவா்களை நீதிமன்றக் காவலில் வைத்ததில் எந்தவொரு தாமதமும் இல்லை, அனைத்தும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, பிணை கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.