ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!
ஒகேனக்கல் சுற்றுலாப் பரிசல் சேவை மீண்டும் தொடக்கம்..
தமிழக காவிரி கரையோர நீர்ப் பிடிப்புகளில் மழை, கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்துக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க வெள்ளிக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழக காவிரி கரையோர பகுதியான அஞ்செட்டி நாற்ற பாளையம் கேரட்டி, கெம்பாக்கரை, ராசி மணல், மொசல் மடுவுர பிலிகுண்டுலு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பெய்து வந்த கனமழை குறைந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கியது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாகச் சரிந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 13 நாள்களாக பரிசல்கள் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டு வந்ததை அடுத்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் பரிசல்கள் இயக்க மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் அனுமதி அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனால் மாமரத்துக்கடவு பரிசல் துறை திறக்கப்பட்டு ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர். மேலும், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளைத் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.