தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரை
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா பேசியது பற்றி...
தவெக ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கிச் செல்வதாக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய மேயர் பிரியா பேசியதாவது:
Advertisement
Advertisement
”தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்களில் மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், விலைவாசி உயர்வு, ஏழைகளின் ஆவின் பால் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டால் தூக்கமின்றி தவிக்கும் தமிழ்நாட்டு மக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி படிக்கின்ற மாணவர்கள், மின்வெட்டு குறித்து கேட்டால் காற்று அடிக்கவில்லை எனக் கூறும் அமைச்சர்கள் என நிர்வாக சீர்கேட்டால் தமிழ்நாடு பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை நகரின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக இருந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது, மீனம்பாக்க விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் தவெக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது.
இன்று தமிழக அரசின் நிலை எப்படி இருக்கிறது என்றால், தனியார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் ஒருவர் கூறியது போன்று, தலைவன் என்றால் என்னவென்ற பொறுப்பை உணராமல், வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகள் வரும்போது எதிரணியினர் மீது போடுவது தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது என்றார். அதுதான் இன்றைய உண்மை நிலை.
திராவிட முன்னேற்றக் கழகம் எந்த இடத்தில் இருந்தாலும் கொள்கையில் உறுதியுடன் செயல்படும். திமுகவின் சேவை தமிழ்நாட்டுக்கு எப்போதும் தேவை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மாமன்ற கூட்டம் தொடங்கியவுடன், அம்பேத்கரின் புகைப்படத்தை வேறு இடத்திற்கு மாற்றியதாக விசிக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே திமுக கவுன்சிலர்களும் எழுந்து விசிக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அம்பேத்கர் படத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Tamil Nadu is regressing under the TVK government - Mayor Priya's speech
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.