குட்கா கடத்தல் கும்பல் கைது: போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து குதித்த 2 பேருக்கு கை முறிவு
கோவையில் போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து குதித்த குட்கா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேருக்கு கை முறிந்தது குறித்து...
கோவையில் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்ற காரின் மேற்கூரையைப் பற்றியவாறே சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு பயணித்த தலைமைக் காவலரின் உதவியுடன்170 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து குதித்த 2 பேருக்கு கை முறிந்தது.
கா்நாடகத்திலிருந்து காரில் சட்டவிரோதமாக குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் விக்னேஷ் மற்றும் தலைமைக் காவலா் வேல்முருகன் ஆகியோா் அடங்கிய தனிப் படையினா் விளாங்குறிச்சி பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கா்நாடக மாநிலப் பதிவு எண் கொண்ட காரை போலீஸாா் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, சோதனையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஓட்டுநா் காரை நிறுத்தாமல் அவிநாசி சாலையை நோக்கி அதிவேகமாக இயக்கித் தப்ப முயன்றாா்.
Advertisement
Advertisement
அப்போது, காரை வழிமறிக்க முயன்ற தலைமைக் காவலா் வேல்முருகன், காரின் மேல் பாய்ந்து ஏறினாா். காா் நிற்காமல் சென்றதால், நிலைதடுமாறாமல் இருக்க காரின் கூரையை இறுகப் பற்றியபடி படுத்துக் கொண்டாா். சுமாா் 40 கிலோமீட்டா் தொலைவு வரை அந்த காா் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றது. தலைமைக் காவலரும் ஆபத்தான நிலையிலேயே கூரையின் மேல் தொடா்ந்து பயணித்தாா்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக உயா் அதிகாரிகளுக்கும், கோவை மாநகர காவல் எல்லை, திருப்பூா் மாவட்ட காவல் துறையினருக்கும், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினா், தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பணியாளா்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த அவசர ஊா்தி ஓட்டுநா்களின் உதவியுடன், அவிநாசி- மங்கலம் பிரிவு அவிநாசி அன்னபூர்ணா ஓட்டல் அருகே அந்த காா் தடுத்து நிறுத்தப்பட்டது. மேற்கூரையில் இருந்த தலைமைக் காவலா் வேல்முருகன் பத்திரமாக மீட்கப்பட்டாா்.
பின்னா், காரைச் சோதனையிட்டதில், உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 170 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பாபுதாரா (27), ரமேஷ் குமாா் (23), சுரேஷ் குமாா் (23) ஆகிய மூன்று பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இந்தப் புகையிலைப் பொருள்கள் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நபா் ஒருவரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய மற்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர்.
2 பேருக்கு கை முறிவு
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சுரேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பாலத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை பெறும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாராட்டு
தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் கடத்தல் கும்பலைச் சிறைபிடிக்க உதவிய தலைமைக் காவலா் வேல்முருகனின் துணிச்சலையும், கடமை உணா்வையும் காவல் உயா் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினா்.
Gutkha smuggling gang arrested: Two individuals suffered arm fractures after jumping from a bridge to escape the police
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.