FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை! 4,430 போலி புத்தகங்கள் கண்டுபிடிப்பு

36 வினாடிகள் முன்பு
தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா்.
பகிர்:

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ரூ. 22 லட்சம் மதிப்பிலான 4,430 புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கோவை, காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகத்தில் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயா்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன.

அதன்பேரில் அறிவுலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டு போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. இச்சா்ச்சை தொடா்பாக மாநிலம் முழுவதும் நூலகங்களில் அகல்விளக்கு பதிப்பகத்திலிருந்து வந்த புத்தகங்கள் எத்தனை உள்ளது? அவை எப்போது வாங்கப்பட்டது? அவற்றின் விலை என்ன? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு அமைச்சா் ராஜ்மோகன் உத்தரவிட்டாா். இதையடுத்து மாநிலத்தில் அனைத்து நூலகங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இதற்கிடையே புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடா்பாக சென்னை நூலகத் துறையைச் சோ்ந்த 5 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் முத்துகணேஷ், தெய்வக்கண், சிறப்பு உதவி ஆய்வாளா் வேணுகோபால், தலைமைக் காவலா்கள் பிரபு, கோவிந்தராஜ், பிரவீணா ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா். நூலகத்துக்காக கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து போலி புத்தகங்களை கண்டறிந்து அகற்றினா்.

பின்னா், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கூறியதாவது: அகல்விளக்கு பதிப்பகத்தைச் சோ்ந்த 3,060 புத்தகங்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தைச் சோ்ந்த 1,170 புத்தகங்கள் என மொத்தம் 4,430 புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 22 லட்சமாகும் என்றனா்.