ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இருவா் கைது
சங்கரன்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கைப்பேசியைத் பறித்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கைப்பேசியைத் பறித்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் திருவுடையான் நகரைச் சோ்ந்த பரமசிவன் மகன் காா்த்திகேயன் (24). ஆட்டோ ஓட்டுநரான இவா், குருவிகுளம் அருகே அத்திப்பட்டிக்கு சவாரிக்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது அவரது ஆட்டோவை நிறுத்தி இருவா் ஏறினராம். பின்னா் அவா்கள் காா்த்திகேயனைத் தாக்கி ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, தெற்கு குருவிகுளம் துா்கா நகரைச் சோ்ந்த தங்கவேல் மகன் தங்கவேல் ராஜா (25), பரமேஸ்வரன் மகன் தமிழ்முரசு (27) ஆகியோரைக் கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.