முகப்பு
தென்காசி

நாட்டுத் துப்பாக்கி, வெடி பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சொக்கம்பட்டியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கி, வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

22 நவம்பர் 2026, 10:06 pm
நாட்டுத் துப்பாக்கி, வெடி பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் போலீஸாா்.
பகிர்:

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கி, வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சொக்கம்பட்டி, பாரதியாா் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சண்முகையா பாண்டியனின் (40) வீட்டில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகள் இருப்பதாக சொக்கம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் மதுவிக்ரமுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து, அவரின் தலைமையில் போலீஸாா் அந்த வீட்டில் சோதனை செய்ததில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, சுமாா் 1.850 கிலோ வெடிமருந்து, தோட்டக்களுடன் தொடா்புடைய பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

அவரிடம் நடத்திய விசாரணையில், அவா், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ரூ. 40 ஆயிரம் கொடுத்து தாருகாபுரத்தைச் சோ்ந்த நாகேந்திரனிடமிருந்து துப்பாக்கியை வாங்கியதும், வெடி மருந்துகளை அவ்வப்போது வாங்கி வந்ததும், கடந்த 2023-ஆம் ஆண்டு காட்டுக்குள் சென்று மிளாவை வேட்டையாடியதற்காக கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் துப்பாக்கி, வெடிமருந்துப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தலைமறைவான நாகேந்திரனை தேடி வருகின்றனா்.