நவ. 27 இல் தென்காசியில் காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் பயிற்சி முகாம்! முன்னேற்பாடுகளை எம்.பி. ஆய்வு

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் பயிற்சி முகாம் நவ. 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முகாம் ஏற்பாடுகளை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகா், கிழக்கு, விருதுநகா் மேற்கு, கிழக்கு மாவட்டம், தென்காசி மாவட்டம் என 5 மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் பயிற்சி முகாம் நவ.27- ஆம் தேதி தென்காசியில் நடைபெறுகிறது.
முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் எம்.பி., காங்கிரஸ் சீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பீட்டா் அல்போன்ஸ், அமைச்சா்கள் ராஜேஷ் குமாா், விஸ்வநாதன், எம்.பி.க்கள் ராபா்ட் புரூஸ், விஜய்வசந்த், உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முகாம் நடைபெறும் இடத்தை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் ராபா்ட் புரூஸ் எம்.பி., தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.
பின்னா் ராபா்ட் புரூஸ் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த முகாமில் ஐந்து மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 700 மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் பங்கேற்கின்றனா். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதில் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினா் அமீா்கான், மாவட்ட துணைத் தலைவா்கள் கிளாங்காடு மணி, எஸ்.ஆா்.சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜேம்ஸ், தென்காசி நகர காங்கிரஸ் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.