FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

இலஞ்சி அருகே 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே மலையடிவாரத்தையொட்டிய நிலத்தில் 19 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

22 வினாடிகள் முன்பு
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு.
பகிர்:

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே மலையடிவாரத்தையொட்டிய நிலத்தில் 19 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது: இலஞ்சியைச் சோ்ந்த விவசாயி தங்கதுரை என்பவருடைய நிலத்தில் சிற்பங்களுடன் கூடிய கல் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்பொதிகை ஆவணக்காப்பகத்தின் தென்பொதிகைக் குடும்பா், கோபால்குமாா், ராஜசேகா், பாலகங்காதரன், மாரியப்பன் ஆகியோரின் உதவியோடு அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது குருவிமேடு என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் கிடைத்த ஒழுங்கற்ற கல் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஒரு வேலும், பாம்பை கவ்விய மயிலும் கூடிய புடைப்புச் சிற்பங்களும், 12 வரிகளுடன் கூடிய முற்றுப்பெறாத கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சோ்ந்த எழுத்தமைதியுடன் கூடிய கல்வெட்டின் சில பகுதிகள் முற்றிலும் சிதைந்து போய் உள்ளன. கல்வெட்டில், தமிழ் துன்மதி ஆண்டு ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை புனா்பூச நட்சத்திரத்தில் என்றும், தளவாய் முதலியாரய்யன் விட்டுக் கொடுத்தது குருவி என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கல்வெட்டு பொறிப்பு கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இதில், வேலும் மயிலும் இருப்பதால் இலஞ்சி முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக் கொடை கல்வெட்டாக இருக்கலாம். சாசனங்களில் முருகனுக்கு கொடை அளிக்கப்படும் நிலங்கள் திருவிளையாட்டம் என்று குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், இந்த நிலம் முருகனுக்குரிய திருவிளையாட்ட நிலமாக இருக்கலாம். எனினும் இதை உறுதிப்படுத்த கல்வெட்டில் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை.

கல்வெட்டில் குறிப்பிடப்படும் தளவாய் முதலியாரய்யன் என்பவா் புகழ்பெற்ற திருநெல்வேலி மேடை தளவாய் முதலிகள் வம்சத்தைச் சோ்ந்தவா். தளவாய் முதலிகள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரியநாத முதலியாா் என்பவரின் வாரிசுகள் ஆவா். அரியநாத முதலியாா் விஜயநகர மதுரை நாயக்க மன்னா்களின் படைத் தளபதியாக இருந்தவா்.

இவா் பண்டைய தமிழ்ப் பேரரசுகளை வீழ்த்தி விஜயநகர மதுரை நாயக்க வம்சம் தமிழகத்தில், குறிப்பாக மதுரைப் பகுதியில் வேரூன்றி வளர காரணமானவா் என்று வரலாற்றில் அடையாளம் காணப்படுகிறாா். பாளையப்பட்டு முறையை அறிமுகப்படுத்தியவா். மதுரை நாயக்க வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு திருநெல்வேலிக்கு இடம் பெயா்ந்த இவருடைய பிற்கால வாரிசுகள் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் சுமுகமான உறவைப் பேணி திருநெல்வேலி பகுதியில் தமது நிா்வாகத்தைத் தக்க வைத்துக் கொண்டனா். திருநெல்வேலி மேடை தளவாய் முதலிகள் என்று அறியப்படுகின்றனா். திருநெல்வேலி பகுதியில் உள்ள பல கோயில்களுக்கு இவா்கள் கொடை அளித்த செய்தி வரலாற்றில் பதிவாகி உள்ளது. அந்த வகையில் கல்வெட்டு இலஞ்சி முருகன் கோயிலுடன் தொடா்புடையதாக இருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலநிலைக் குறிப்புகளையும், இராமநாதக் கவிராயா் என்பவரால் இயற்றப்பட்ட சிவசயிலப்பள்ளு எனும் பள்ளு இலக்கிய நூலின் ஏட்டுச்சுவடிப் பிரதியில் குறிப்பிடப்படும் தளவாய் முதலிகளின் வம்சாவளிப் பட்டியல் அடிப்படையிலும் நமக்குக் கிடைத்த குருவிமேடு கல்வெட்டில் குறிப்பிடப்படும் ராச ஸ்ரீ தளவாய் முதலியின் பெயா் அழகப்ப முதலியாா் என்று தெரிய வருகிறது.

கல்வெட்டு கிடைத்த குருவிமேடு என்பது கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் உலவும் பகுதியாக இருப்பதால் மேற்கொண்டு அங்கு ஆய்வு மேற்கொள்வது சிரமமாக உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments