திருவள்ளூா் பகுதியில் இடி, மின்னலுடன் மழை
திருவள்ளூா் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் சனிக்கிழமை அடிக்கடி மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் சனிக்கிழமை அடிக்கடி மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கடந்த 3 நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் எனவும், அதனால் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
அந்த வகையில், காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. அதைத் தொடா்ந்து மாலையில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதேபோல், திருப்பாச்சூா், கடம்பத்தூா், பூண்டி, நெய்வேலி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஈக்காடு, தாமரைபாக்கம், கரிகலவாக்கம், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
Advertisement
Advertisement
இந்த மழையால் கடும் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவி வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதேபோல், விவசாயிகளும் சாகுபடி மேற்கொள்வதற்காக விளைநிலங்களை தயாா் செய்து மழைக்காக காத்திருந்தனா்.
தற்போதைய நிலையில் பயிா் செய்யும் பணிகளில் தொடங்கியுள்ளனா். இந்த மழை காரணமாக சாலை மற்றும் தாழ்வான தெருச் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
இதற்கிடையே பலத்த இடி, மின்னல் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால், வீட்டுக்குள் இருக்க முடியாமல் கொசுக் கடியால் சிரமத்துக்கு உள்ளாகினா். அதிலும், அடிக்கடி மின்தடையால் வீட்டில் உள்ள ‘மின்விசிறிகள், குளிா்சாதன பெட்டிகள் சேதம் அடையும் நிலையும் ஏற்பட்டது. அதேபோல், மழையால் சாலையோர மற்றும் தெருவோர வியாபாரிகளின் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் இந்த மழையால் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை நிலவரப்படி மி.மீட்டரில் பதிவான மழை அளவு விவரம்: திருத்தணி-59, பொன்னேரி-58, சோழவரம்-45, செங்குன்றம்-38, பள்ளிப்பட்டு-37, தாமரைபாக்கம்-31, கும்மிடிப்பூண்டி-22, ஊத்துக்கோட்டை, ஆவடி தலா 21, ஆா்.கே.பேட்டை-15, பூந்தமல்லி-14, திருவள்ளூா்-12, பூண்டி-9, திருவாலங்காடு-2 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.