அக்டோபர் 11 முதல் சர்வதேச விமான சேவை: கோ-ஏர்
குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வரும் கோ-ஏர் நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதியிலிருந்து சர்வதேச அளவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மும்பை: குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வரும் கோ-ஏர் நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதியிலிருந்து சர்வதேச அளவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோ-ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்னெலிஸ் விரைஸ்விஜிக் வியாழக்கிழமை கூறியதாவது:
கோ-ஏர் நிறுவனத்தின் சர்வதேச விமான சேவை வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது. அதன்படி, புது தில்லி மற்றும் மும்பையிலிருந்து தாய்லாந்தின் புக்கட் நகருக்கு விமானங்கள் முதல் முறையாக இயக்கப்படவுள்ளன.
இதையடுத்து, அக்டோபர் 14-ஆம் தேதி முதல் மாலத்தீவின் தலைநகர் மாலிக்கு மும்பை மற்றும் தில்லியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தப் புதிய சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்றார் அவர்.
உள்நாட்டு சேவையிலிருந்து சர்வதேச விமான சேவைக்கு மாறும் ஆறாவது நிறுவனமாக கோ-ஏர் உருவெடுத்துள்ளது.
சென்ற 2005-ஆம் ஆண்டு நவம்பரில் உள்நாட்டு விமான சேவையை தொடங்கிய கோ-ஏர், சீனா, வியட்நாம், மாலத்தீவு, கஜகஸ்தான், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட ஒன்பது உலக நாடுகளுக்கு விமானங்களை இயக்க கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்திலேயே அனுமதியைப் பெற்று விட்டது.
கோ-ஏர் நிறுவனம் நாடு தழுவிய அளவில் உள்ள 23 நகரங்களுக்கு வாரத்துக்கு 1,544 முறை விமானங்களை இயக்கி வருகிறது.
தற்போதைய நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தனியார் நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ, ஸ்பெஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தப் பட்டியலில் கோ-ஏர் நிறுவனமும் இடம்பெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.