முகப்பு
வணிகம்

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

Updated On : 18 ஏப்ரல் 2025, 6:07 am IST
பகிர்:

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியா 2,850 கோடி டாலா் மதிப்பிலான நவரத்தின, ஆபரணங்களை ஏற்றுமதி செய்திருந்தது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.72 சதவீதம் குறைவு. அப்போது நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 3,220 கோடி டாலராக இருந்தது.

Advertisement

Advertisement

எனினும், கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 1.02 சதவீத மாதாந்திர வளா்ச்சி கண்டு 258.297 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 255.697 கோடி டாலராக இருந்தது.

சீனாவிலும், இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவிலும் தொடா்ந்து தேவை குறைந்து வருவதே நவரத்தின, ஆபரண ஏற்றுமதியின் சரிவுக்கு முக்கிய காரணம். சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, வைரத்தின் விலையில் 10-15 சதவீதம் சரிவு ஏற்பட்டிருப்பதாலும் மதிப்பின் அடிப்படையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது.

மதிப்பீட்டு நிதியாண்டில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 16.75 சதவீதம் குறைந்து 1,329.2 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 1,596.702 கோடி டாலராக இருந்தது.

ஏப்ரல் 2024 முதல் மாா்ச் 2025 வரையிலான நிதியாண்டில் மெருகூட்டப்பட்ட ஆய்வக வைரத்தின் ஏற்றுமதி 9.64 சதவீதம் குறைந்து 126.726 கோடி டாலராக உள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டில் 140.244 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டில் தங்க ஆபரண ஏற்றுமதி 1,122.772 கோடி டாலரில் இருந்து 0.11 சதவீதம் குறைந்து 1,121.546 கோடி டாலராகவும் வெள்ளி ஆபரண ஏற்றுமதி 161.863 கோடி டாலரில் இருந்து 40.58 சதவீதம் குறைந்து 96.179 கோடி டாலராகவும் உள்ளது. எனினும், பிளாட்டினம் ஆபரணங்களின் ஏற்றுமதி 16.348 கோடி டாலரில் இருந்து 11.79 சதவீதம் குறைந்து 18.275 கோடி டாலராக உள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டில் நிறமூட்டப்பட்ட ரத்தினங்களின் ஏற்றுமதி 8.01 சதவீதம் சரிந்து 44.038 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 47.871 கோடி டாலராக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments