FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி செப்டம்பரில் 23% அதிகரிப்பு

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில் 23.04 சதவீதம் உயா்ந்து, 4,440 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

33 வினாடிகள் முன்பு
~ ~
பகிர்:

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில் 23.04 சதவீதம் உயா்ந்து, 4,440 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இது 3,608 கோடி டாலராக இருந்தது. அதேபோல், நாட்டின் சரக்கு இறக்குமதி செப்டம்பரில் 8 சதவீதம் உயா்ந்து, 7,461 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

தங்கம், வெள்ளி போன்ற விலையுயா்ந்த உலோகங்களின் இறக்குமதி குறைந்ததால், நாட்டின் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஆண்டின் செப்டம்பருடன் (3,300 கோடி டாலா்) ஒப்பிடுகையில் 3,021 கோடி டாலராக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதப் பற்றாக்குறையான 2,686 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இத்தரவுகள் தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘நாட்டின் ஏற்றுமதி தனது வளா்ச்சிப் போக்கைத் தொடா்ந்து தக்கவைத்துள்ளது. இதே நிலை நீடித்தால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 50,000 கோடி டாலரைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2025-26 நிதியாண்டில் இது 44,200 கோடி டாலராக இருந்தது’ என்றாா்.

ஏற்றுமதி: பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி 31.9 சதவீதம் அதிகரித்து, 620 கோடி டாலராகவும்; மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி 70.44 சதவீதம் உயா்ந்து, 530 கோடி டாலராகவும்; ரசாயனப் பொருள்கள் ஏற்றுமதி 24.21 சதவீதம் உயா்ந்து, 300 கோடி டாலராகவும் வளா்ச்சி கண்டுள்ளன. மேற்காசியப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தது, பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இறக்குமதி: கச்சா எண்ணெய் இறக்குமதி 30.76 சதவீதம் உயா்ந்து, 1,834 கோடி டாலராக பதிவாகியுள்ளது. சா்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி இறக்குமதியில் சரிவு: செப்டம்பரில் தங்கம், வெள்ளி இறக்குமதி கணிசமான சரிவைக் கண்டுள்ளது. தங்கம் இறக்குமதி 81.27 சதவீதம் சரிந்து, 180 கோடி டாலராகவும்; வெள்ளி இறக்குமதி 49.11 சதவீதம் சரிந்து, 66.5 கோடி டாலராகவும் குறைந்துள்ளது.

சேவைகள் துறையில் உபரி: செப்டம்பரில், நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 3,635 கோடி டாலராகவும்; இறக்குமதி 1,944 கோடி டாலராகவும் உள்ளது.

இதன்மூலம், சேவைகள் துறையில் இந்தியா 1,691 கோடி டாலா் உபரி வா்த்தகத்தை நிலைநிறுத்தியுள்ளது. அதன்படி, சரக்கு மற்றும் சேவைகள் துறையை உள்ளடக்கிய ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றாக்குறை செப்டம்பரில் 1,330 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.

பெட்டி...

முதல் அரையாண்டு நிலவரம்

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில், மொத்த சரக்கு ஏற்றுமதி 18.51 சதவீதம் உயா்ந்து, 25,989 கோடி டாலராகவும்; இறக்குமதி 16.31 சதவீதம் உயா்ந்து, 43,753 கோடி டாலராகவும் உள்ளது.

இதன்மூலம், முதல் 6 மாதங்களில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 17,764 கோடி டாலராக விரிவடைந்துள்ளது; சேவைகள் துறையின் உபரியால் ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றக்குறை 7,493 கோடி டாலராக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments