இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவு 24% அதிகரிப்பு!
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 6% அதிகரித்து 1.692 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
புதுதில்லி: நிதியாண்டின் அக்டோபர் வரை முடிவடைந்த காலத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி 6 சதவீதம் அதிகரித்து 1.692 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதே சமயம், இறக்குமதிக்கான செலவு 24 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
2025-26 நிதியாண்டின் நவம்பர் முதல் அக்டோபர் வரையான காலத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதே வேளையில் 1.601 கோடி டன்னாக இருந்த இறக்குமதி 1.692 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதற்கான இறக்குமதிச் செலவு சுமார் ரூ.1,61,126 கோடியாக இருந்ததாக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
சமையல் எண்ணெய் அல்லாத எண்ணெயை சேர்த்து, மொத்தமாக இறக்குமதி 5% அதிகரித்து 1.724 கோடி டன்னாக உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெயின் அளவுக்கும், நாட்டின் தேவைக்கும் இடையே உள்ள பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக இந்தியா சமையல் எண்ணெயைை இறக்குமதி செய்து வருகிறது.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆண்டு 17.4 லட்சம் டன்களாக இருந்த நிலையில், 2025-26 ல் இது 8.2 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மிகக் குறைவாகக் கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக, மொத்த இறக்குமதியில் அவற்றின் பங்கு 11 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி 1.427 கோடி டன்களிலிருந்து 1.611 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமோலினுக்குப் பதிலாக கச்சா பாமாயில் கொள்முதல் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
பாமாயில் இறக்குமதி 75.8 லட்சம் டன்களிலிருந்து 82.3 லட்சம் டன்களாக உயர்ந்தது, அதே நேரத்தில் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெயின் இறக்குமதி 8.43 மில்லியன் டன்களிலிருந்து 8.70 மில்லியன் டன்களாக அதிகரித்தது.
மொத்த இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 47 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெயின் பங்கு 53 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாகக் குறைந்துள்ளது.