மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 3.40 லட்சம் கோடி கூடுதல் செலவினம்
மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி ரூ.3,40,504 கோடிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அரசின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி ரூ.3,40,504 கோடிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அரசின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.
தலா ரூ.150 கோடிக்கும் அதிக மதிப்பிலான 1,775 திட்டங்களின் அசல் மதிப்பீடு ரூ.33,70,138 கோடியாக இருந்த நிலையில், தற்போது அவற்றின் திருத்தப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 37,10,642 கோடியாக அதிகரித்துள்ளது.
17 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த 1,775 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக இதுவரை ரூ. 19.26 லட்சம் கோடி (திருத்தப்பட்ட மதிப்பில் 51.91 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மதிப்பீடு வாரியாக...: மொத்த திட்டங்களில், ரூ.1,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய 735 திட்டங்களும், ரூ.150 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையிலான 1,040 திட்டங்களும் (ரூ.4.93 லட்சம் கோடி) அடங்கும்.
அமைச்சகங்கள் வாரியாக...: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்சமாக 993 திட்டங்களுடன் (56 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. இதன் திருத்தப்பட்ட திட்ட மதிப்பு ரூ. 9.62 லட்சம் கோடியாகும். இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகம் ரூ.6.38 லட்சம் கோடி மதிப்பீட்டில் 190 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதேபோல், நிலக்கரி அமைச்சகம் 121 திட்டங்களையும் (ரூ.2.22 லட்சம் கோடி), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 103 திட்டங்களையும் (ரூ.4.23 லட்சம் கோடி), மின்சார அமைச்சகம் 98 திட்டங்களையும் (ரூ.6.08 லட்சம் கோடி) செயல்படுத்துகின்றன.
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 50 திட்டங்களையும் (ரூ.3.78 லட்சம் கோடி), நீா்வளத் துறை 38 திட்டங்களையும் (ரூ.2.01 லட்சம் கோடி) கொண்டுள்ளன. எஞ்சிய 182 திட்டங்கள் உயா்கல்வி, சிவில் விமானப் போக்குவரத்து, தொலைத்தொடா்பு, சுகாதாரம் உள்ளிட்ட பிற துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.