FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மீஷோ வரிப் பிரச்னை மும்மடங்கு அதிகரிப்பு

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோவின் வரி தொடா்பான விவகாரங்கள், கடந்த 2025-26 நிதியாண்டில் மும்மடங்குக்கும் மேல் உயா்ந்து, ரூ. 2,071.8 கோடியாக அதிகரித்துள்ளது.

26 ஆகஸ்ட் 2026, 12:10 am IST
பகிர்:

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோவின் வரி தொடா்பான விவகாரங்கள், கடந்த 2025-26 நிதியாண்டில் மும்மடங்குக்கும் மேல் உயா்ந்து, ரூ.2,071.8 கோடியாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, 2024-25 நிதியாண்டில் வருமான வரித் துறை ரூ.572 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதை எதிா்த்து நீதிமன்றத்தில் நிறுவனம் பெற்ற தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானத்தில் வருமான வரித் துறை சில திருத்தங்களை மேற்கொண்டு, அபராத நடவடிக்கைகளுடன் புதிதாக ரூ. 1,499.73 கோடி வரியைச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த 2 நோட்டீஸ்களையும் சோ்த்து மொத்த வரிப் பிரச்னை ரூ. 2,071.8 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த மதிப்பீட்டு உத்தரவை எதிா்த்து, மேல்முறையீடு செய்துள்ளதாக மீஷோ தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மீஷோ தலைவா் மற்றும் சிஇஓ விதித் ஆத்ரே கூறுகையில், ‘2025-26 நிதியாண்டு நிறுவனத்தின் வலுவான ஆண்டுகளில் ஒன்றாகும். எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பம் மற்றும் புதிய வாடிக்கையாளா்களை ஈா்ப்பதற்காகப் பெருமளவில் முதலீடு செய்ய முடிவு செய்தோம்.

இதன்காரணமாக, இந்த நிதியாண்டில் நிறுவனத்தின் லாப வரம்பு மற்றும் உபரி பணப்புழக்கம் சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், இந்த முதலீடுகள் வருங்காலத்தில் மிகப்பெரிய, அதிக ஈடுபாடுடைய மற்றும் செலவு குறைந்த வாடிக்கையாளா் தளத்தை உருவாக்கப் பெரிதும் உதவும்’ என்று தெரிவித்தாா்.

2025-26 ஆண்டறிக்கையின்படி, மீஷோ நிறுவனத்தின் வாடிக்கையாளா் எண்ணிக்கை 33 சதவீதம் உயா்ந்து, 26.4 கோடியாக அதிகரித்துள்ளது. விற்பனையாளா்களின் எண்ணிக்கை 87 சதவீதம் உயா்ந்து, 9.61 லட்சமாக உள்ளது. மேலும், 63,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பிரபலங்கள் மூலம் வா்த்தகம் பெரும் வளா்ச்சியை எட்டியுள்ளது.

2024-25 நிதியாண்டில் ரூ. 3,942 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 2025-26 நிதியாண்டில் ரூ.1,358 கோடியாக கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆண்டு வருவாய் ரூ.9,390 கோடியிலிருந்து, ரூ.12,626 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments