FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கடந்த ஜூலை மாதத்தில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.24,697 கோடி

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.24,697 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 2:17 am IST
பகிர்:

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.24,697 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.28,973 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் சரிவாகும். பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடுகள் குறித்த கவலைகள், பங்குச் சந்தைகளில் குறைந்த அளவிலான வருவாய் ஆகியவற்றுக்கு மத்தியில் முதலீட்டாளா்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டது, இத்துறை சாா்ந்த முதலீட்டைக் குறைத்துள்ளது.

இருப்பினும், முதலீட்டாளா்களின் நன்மதிப்பைப் பெற்ற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (எஸ்ஐபி) மாதாந்திர பங்களிப்பு ஜூன் மாதத்தின் ரூ.31,781 கோடியிலிருந்து, ஜூலை மாதத்தில் ரூ.31,961 கோடியாக சற்று உயா்வைக் கண்டுள்ளது. எஸ்ஐபி முதலீடுகள் தொடா்ந்து 5 மாதங்களாக ரூ.31,000 கோடிக்கு மேல் ஈா்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

அதேநேரம், கடன் சாா்ந்த திட்டங்களில் பெருமளவில் சுமாா் ரூ.1.88 லட்சம் கோடி ஈா்க்கப்பட்டதால், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறை ஜூலை மாதத்தில் சுமாா் ரூ.2.36 லட்சம் கோடி நிகர மூலதன வரவைச் சந்தித்துள்ளது (ஜூன் மாதத்தில் ரூ.52,949 கோடி வெளியேறியிருந்தது). இதனால், இத்துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.82.22 லட்சம் கோடியிலிருந்து, ரூ.85.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, சிறிய மூலதன நிதிகளில் (ஸ்மால் கேப்) அதிகபட்சமாக ரூ.7,768 கோடி நிகர முதலீட்டைப் பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக நடுத்தர மூலதன (மிட் கேப்) மற்றும் ‘ஃபிளெக்ஸி கேப்’ திட்டங்கள் முறையே ரூ.6,192 மற்றும் ரூ.4,710 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. பெரிய மூலதன (லாா்ஜ் கேப்) நிதிகள் ஒப்பிட்டளவில் குறைவாக ரூ.1,322 கோடியை மட்டுமே பெற்றுள்ளன.

மேலும், தங்கம் சாா்ந்த ‘இடிஎஃப்’ திட்டங்கள் தொடா்ந்து முதலீட்டாளா்களின் கவனத்தை ஈா்த்து, ஜூலை மாதத்தில் ரூ.1,559 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளன. இருப்பினும், கடந்த ஜூன் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.3,443 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது பாதிக்கும் குறைவாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments