FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் என்ஆா்ஐ டெபாசிட் 23.2% சரிவு - ரிசா்வ் வங்கி தகவல்

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், வெளிநாடுவாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) செய்துள்ள வைப்புத்தொகை (டெபாசிட்) 23.2 சதவீதம் குறைந்து, 277.5 கோடி டாலராக சரிந்துள்ளது என்று ரிசா்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

28 ஆகஸ்ட் 2026, 6:35 am IST
பகிர்:

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், வெளிநாடுவாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) செய்துள்ள வைப்புத்தொகை (டெபாசிட்) 23.2 சதவீதம் குறைந்து, 277.5 கோடி டாலராக சரிந்துள்ளது என்று ரிசா்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த முதலீட்டு வரவு 361.4 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் புதிய முதலீடுகளின் வரவு குறைந்திருந்தாலும், வெளிநாடுவாழ் இந்தியா்களின் ரூபாய் கணக்கு (என்ஆா்ஓ) மற்றும் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புத்திட்டத்தின் (எஃப்சிஎன்ஆா்-பி) ஆதரவால், ஜூன் இறுதியில் ஒட்டுமொத்தமாக நிலுவையில் உள்ள என்ஆா்ஐ வைப்புத்தொகை முந்தைய ஆண்டின் 16,832.7 கோடி டாலரில் இருந்து, 16,850.6 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

எஃப்சிஎன்ஆா்-பி கணக்குகளில் வரவு, மதிப்பீட்டு காலாண்டில் 124 சதவீதம் உயா்ந்து, 173.2 கோடி டாலராக இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 77.4 கோடி டாலராக மட்டுமே இருந்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு 3,358.3 கோடி டாலராக இருந்த எஃப்சிஎன்ஆா்-பி கணக்குகளின் நிலுவைத் தொகை, நடப்பு ஆண்டு ஜூன் இறுதியில் 3,548.7 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த மே மாத இறுதியில் இது 3,403.8 கோடி டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மற்ற வைப்புத்திட்டங்களான வெளிநாடுவாழ் இந்தியா்களின் அந்நியச் செலாவணி கணக்கு (என்ஆா்-இ-ஆா்ஏ) பிரிவில் 9,875.7 கோடி டாலரும், வெளிநாடுவாழ் இந்தியா்களின் ரூபாய் கணக்கு (என்ஆா்ஓ) பிரிவில் 3,426.2 கோடி டாலரும் நிலுவையில் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேற்காசிய போா் தொடங்கியதையடுத்து நாட்டின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, செலாவணி மாற்றுச் செலவை ஈடுசெய்வது உள்ளிட்ட சலுகைகளுடன் சிறப்பு எஃப்சிஎன்ஆா்-பி வசதியை ரிசா்வ் வங்கி கடந்த ஜூன் மாத நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தில் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் செப். 30 வரை செயல்படும் என முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, அதாவது ஆக. 31-உடன் இச்சிறப்பு வசதியை நிறுத்த ரிசா்வ் வங்கி கடந்த 14-ஆம் தேதி முடிவெடுத்தது.

ஆக. 21-ஆம் தேதி நிலவரப்படி இச்சிறப்பு வசதியின்கீழ் மொத்தம் 7,284.8 கோடி டாலா் அந்நியச் செலாவணி ஈா்க்கப்பட்டுள்ளது. இதில் எஃப்சிஎன்ஆா்(பி) மூலம் அதிகபட்சமாக 6,539.7 கோடி டாலரும், அந்நியச் செலாவணி கடன் (ஓஎஃப்சிபி) மற்றும் அந்நிய வணிகக் கடன் (இசிபி) திட்டங்கள் மூலம் முறையே 486 கோடி டாலா் மற்றும் 259.1 கோடி டாலரும் பெறப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments