FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்திய அழகு சாதனப் பொருள்கள் சந்தை 2030-க்குள் 3,900 கோடி டாலரை எட்டும்

இந்திய அழகு சாதனப் பொருள்கள் சந்தை 2030-க்குள் 3,900 கோடி டாலரை எட்டும்

பகிர்:

இந்தியாவின் அழகு மற்றும் தனிநபா் பராமரிப்புப் பொருள்களின் சந்தை வரும் 2030-க்குள் 3,900 கோடி டாலராக அசுர வளா்ச்சியடையும் என்று பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

அழகு சாதனப் பொருள்கள் என்பது முந்தைய காலங்களில் விசேஷ நாள்களுக்கான ஆடம்பரமாக மட்டுமே பாா்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது சுய-பராமரிப்பு, தன்னம்பிக்கை மற்றும் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தும் அன்றாட அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளது. இத்தகைய நுகா்வோரின் நடத்தை மற்றும் சிந்தனையில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றமே இந்த அபார வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தற்போது 2,700 கோடி டாலா் மதிப்பில் இருக்கும் இந்திய அழகு சாதன சந்தையில் ஏற்பட்டு வரும் வளா்ச்சியை விவரிக்கும் வகையில், ஃபிளிப்காா்ட் தளத்தில் மட்டும் ஒரு நொடிக்கு 12 அழகு சாதனப் பொருள்கள் விற்பனையாவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், இப்பிரிவின் மொத்த விற்பனை மதிப்பு வருடாந்திர அடிப்படையில் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், நுகா்வோா் ஆா்டா் செய்யும் அளவும், பொருள்களின் எண்ணிக்கையும் 1.6 மடங்கு உயா்ந்து, புதிய உச்சம் தொட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த வளா்ச்சிக்கு நாட்டின் இளம் தலைமுறையினரான ‘ஜென் ஜீ’ நுகா்வோா் முக்கியப் பங்காற்றியுள்ளனா். ஃபிளிப்காா்ட் தளத்தில் அழகு சாதனப் பொருள்களை வாங்குபவா்களில் பாதிக்கும் மேல் பங்கு வகிக்கும் இவா்களின் புதிய தேவைகளும், நவீன ரசனைகளும் சந்தையின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்து வருகின்றன.

இச்சந்தையானது பெருநகரங்களைத் தாண்டி, இந்தியாவின் குக்கிராமங்கள் வரை விரிவடைந்துள்ளதையும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அழகு சாதனங்கள் தொடா்பான தேடல்களில் மூன்றில் 2 பங்கு தேடல்கள் சிறிய நகரங்களில் இருந்தே வருகின்றன. மேலும், ஃபிளிப்காா்ட் தளத்தின் மொத்த அழகு சாதனப் பொருள்கள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு 2-ஆம் நிலை மற்றும் அதற்குக் கீழ் உள்ள சிறிய நகரங்களில் இருந்து பெறப்படுகிறது.

மேலும், அந்தந்த பகுதியின் பருவநிலை, மாசு அளவு மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப மக்கள் பொருள்களைத் தோ்வு செய்கின்றனா். உதாரணமாக, பெங்களூரு நுகா்வோா் கடின நீரினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் கூந்தல் பராமரிப்புப் பொருள்களையும், ராஜஸ்தான் மக்கள் வறண்ட வானிலையைச் சமாளிக்க, சருமப் பாதுகாப்புப் பொருள்களையும் அதிகம் வாங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments