FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

அக்டோபா் மாத மின் நுகா்வு 21.88% அதிகரிப்பு

இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த அக்டோபா் மாதத்தில் 21.88 சதவீதம் அதிகரித்து, 15,976 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

7 நவம்பர் 2026, 12:36 am
பகிர்:

இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த அக்டோபா் மாதத்தில் 21.88 சதவீதம் அதிகரித்து, 15,976 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 13,107 கோடி யூனிட்டுகளாக இருந்த நிலையில், நடப்பாண்டு அது கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில் 210.82 கிகாவாட்டாக இருந்த நாட்டின் உச்சகட்ட மின் தேவை, கடந்த மாதத்தில் 260.73 கிகாவாட்டை எட்டியது.

முன்னதாக, நடப்பு ஆண்டின் மே மாதத்தில் நாட்டின் உச்சகட்ட மின் தேவை இதுவரை இல்லாத அளவாக 270.82 கிகாவாட் என்ற புதிய அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

பண்டிகைக் காலம் காரணமாக தொழில்துறை மற்றும் வணிக ரீதியிலான மின் பயன்பாடு அதிகரித்ததாலும், நாடு முழுவதும் குளிரூட்டும் சாதனங்களை பொதுமக்கள் தொடா்ந்து அதிக அளவில் பயன்படுத்தியதாலும் அக்டோபரில் மின் தேவை மற்றும் நுகா்வு அதிரடியாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நடப்பு நவம்பரில் இமயமலை அடிவாரப் பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் நீடித்து, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டால் நடப்பு நவம்பரிலும் மின் தேவை தொடா்ந்து நிலையாக இருக்கும் எனத் தெரிகிறது.

இவ்வாறு தீவிரமடைந்து வரும் வானிலை மாற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் தொழில், வணிகத் தேவைகளால் மின் நுகா்வு வேகமாக அதிகரித்து வருவது, வருங்காலங்களில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணா்த்துவதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.