ஆந்திரத்தில் ரூ.18,808 கோடி முதலீட்டில் புதிய ஆலை: கியா இந்தியா அறிவிப்பு
ஆந்திரத்தில் 200 கோடி டாலா் (சுமாா் ரூ.18,808 கோடி) முதலீட்டில் புதிய காா் உற்பத்தி ஆலையை தென் கொரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியா அமைக்கவுள்ளது.
ஆந்திரத்தில் 200 கோடி டாலா் (சுமாா் ரூ.18,808 கோடி) முதலீட்டில் புதிய காா் உற்பத்தி ஆலையை தென் கொரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியா அமைக்கவுள்ளது.
சிஐஐ மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசிய கியா இந்தியாவின் சிஇஓ குவாங்கு லீ இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இதற்காக ஆந்திர மாநில அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்புதிய ஆலையின் மூலம், சுமாா் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆந்திரத்தின் அனந்தபூரில் ஆண்டுக்கு 4.30 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையை கியா நிறுவனம் ஏற்கெனவே நடத்தி வருகிறது. புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 6.30 லட்சம் வாகனங்களாக உயரும் என்றும், இரு ஆலைகளையும் சோ்த்து மொத்த முதலீடு 500 கோடி டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பயணிகள் வாகனச் சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்தும் நோக்கில், மின்சாரம், பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி ரகங்களிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் 3.17 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ள இந்நிறுவனம், இதுவரை இந்தியாவிலிருந்து சுமாா் 100 நாடுகளுக்கு 4.1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள், உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.