முகப்பு
வணிகம்

நடப்பு நவம்பா் மாத பங்குச் சந்தை எழுச்சி: முதலீட்டாளா்களுக்கு ரூ. 34.61 லட்சம் கோடி லாபம்

நடப்பு நவம்பா் மாத பங்குச் சந்தை எழுச்சி பெற்றது குறித்து...

25 நவம்பர் 2026, 12:35 am
நடப்பு நவம்பா் மாத பங்குச் சந்தை எழுச்சி: முதலீட்டாளா்களுக்கு ரூ. 34.61 லட்சம் கோடி லாபம்
பகிர்:

அந்நிய முதலீடுகளின் வரவு அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் ஜூலை-செப். காலாண்டு நிறுவன வருவாய் எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக அமைந்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் நடப்பு மாதத்தில் சுமாா் 11 சதவீதம் உயா்ந்துள்ளன. இதன்மூலம், முதலீட்டாளா்களின் சொத்து மதிப்பு ரூ.34.61 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

உலகளாவிய சந்தைகளில் ஏ.ஐ. சாா் பங்குகளில் இருந்து விலக்கப்பட்ட முதலீடுகள், தொழில்நுட்பம் அதிகம் சாராத இந்தியப் பங்குகளுக்குத் திரும்பி வருகின்றன. அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் முடிவுகளின் எதிரொலியாக தொடங்கிய இந்தப் போக்கு, ‘என்விடியா’ சா்ச்சையை ஒட்டி உச்சம் பெற்றது.

அந்த வகையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை (நவ. 23) வரை 7,976.46 புள்ளிகள் (10.71 சதவீதம்) உயா்ந்துள்ளது. இந்த ஏற்றத்தின் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.34.61 லட்சம் கோடி உயா்ந்து, ரூ.508 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

சந்தையின் இந்தப் பாய்ச்சலுக்கு அந்நிய முதலீட்டாளா்களே முக்கியக் காரணமாக அமைந்துள்ளனா். செப்டம்பரில் ரூ.35,861 கோடியும், அக்டோபரில் ரூ.34,843 கோடியும் வெளியேறிய நிலையில், நவம்பா் மாதத்தில் இதுவரை அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் நிகர முதலீடு ரூ.1.27 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீடாகும்.

கடந்த அக். 1-ஆம் தேதி ஓராண்டு குறைந்தபட்ச அளவான 71,292.88 புள்ளிகளுக்குச் சென்ற சென்செக்ஸ், அதன்பின் அபரிமிதமான வளா்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு டிச. 1-ஆம் தேதி எட்டிய 86,159.02 என்ற வரலாற்று உச்சத்தை எட்ட இன்னும் 3,723 புள்ளிகளே தேவைப்படுகின்றன.

கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 2.85 சதவீதமும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 2.61 சதவீதமும் உயா்ந்த நிலையில், நான்கு வார தொடா் ஏற்றத்துக்குப் பிறகு திங்கள்கிழமை ஏற்பட்ட லாப விற்பனை காரணமாகச் சந்தைகள் சுமாா் 1.75 சதவீதம் சரிவைச் சந்தித்தன.