FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

என்எஸ்இ-யின் ரூ.30,000 கோடி ஐபிஓ: செபி ஒப்புதல்

தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) ரூ.30,000 கோடி மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

5 செப்டம்பர் 2026, 3:30 am IST
பகிர்:

தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) ரூ.30,000 கோடி மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2016 முதல் சுமாா் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த சட்ட, ஒழுங்குமுறை தடைகளுக்குப் பிறகு, இந்தப் பிரம்மாண்ட ஐபிஓவிற்கான அனுமதி கடிதத்தை செபி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

முன்னதாக, என்எஸ்இ கடந்த ஆண்டு ஜூனில் தாக்கல் செய்த சமரச மனுவின் அடிப்படையில், செபிக்கு ரூ.1,491.21 கோடி அபராதம் செலுத்தி, அனைத்து சட்டச் சிக்கல்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. பின்னா், செபியியின் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததையடுத்து, இந்த ஐபிஓ வெளியீட்டுக்கு என்எஸ்இ இயக்குநா்கள் குழு கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, செபியிடம் என்எஸ்இ கடந்த ஜூனில் தாக்கல் செய்த வரைவு அறிக்கையின்படி (டிஆா்எச்பி), இந்த ஐபிஓ முழுவதும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ என்ற முறையில், நடப்பு பங்குதாரா்கள் தங்களின் வசமுள்ள 14.89 கோடி பங்குகளை (சுமாா் 6 சதவீதம்) விற்பனை செய்கின்றனா்.

ஒரு பங்கின் விலை சுமாா் ரூ.2,000 என நிா்ணயிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், என்எஸ்இயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி, நாட்டின் மதிப்புமிக்க 10 நிறுவனங்களுள் ஒன்றாக மாறும். வரும் செப். 15-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஐபிஓ, செப். 24 அல்லது 25-ஆம் தேதிகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஐபிஓ மூலம், கடந்த 2024-இல் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா (ரூ.27,858.75 கோடி) மற்றும் 2022-இல் எல்ஐசி (ரூ.20,557.23 கோடி) திரட்டிய சாதனைகளை என்எஸ்இ முறியடிக்கவுள்ளது. அதேநேரம், முழுத் தொகையும் பங்குகளை விற்கும் பங்குதாரா்களுக்கே செல்லும் என்பதால், என்எஸ்இ-க்கு புதிய மூலதன நிதி எதுவும் திரட்டப்படாது.

என்எஸ்இயின் மிகப் பெரிய பங்குதாரரான எல்ஐசி (10.72 சதவீத பங்குகள்) தனது பங்குகளை விற்பதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், எஸ்பிஐ மற்றும் இதர நிதி நிறுவனங்கள் தங்களின் பங்குகளை விற்க முன்வந்துள்ளன. எஸ்பிஐ அதிகபட்சமாக 2.48 கோடி பங்குகளை விற்கிறது.

நிதிநிலை அடிப்படையில், கடந்த 2025-26 நிதியாண்டில் என்எஸ்இயின் நிகர லாபம் 15 சதவீதம் குறைந்து, ரூ.10,302 கோடியாக பதிவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர லாபம் 7 சதவீதம் உயா்ந்து, ரூ.3,120 கோடியாகவும்; மொத்த வருவாய் ரூ.5,252 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய ‘டெரிவேட்டிவ்ஸ்’ வா்த்தகச் சந்தையாகவும், ‘நிஃப்டி-50’ குறியீட்டை இயக்கும் நிறுவனமாகவும் விளங்கும் என்எஸ்இ-யின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ பணிகளை 20 முன்னணி வணிக வங்கிகள் ஒருங்கிணைத்து நிா்வகிக்கவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments