FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

நாள்தோறும் 18 லட்சம் பீப்பாய் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி

ரஷியாவிடமிருந்து செப்டம்பா் மாதத்தில் சராசரியாக தினந்தோறும் 18 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

25 செப்டம்பர் 2026, 4:16 am IST
கச்சா எண்ணெய் - பிரதிப் படம்
பகிர்:

ரஷியாவிடமிருந்து செப்டம்பா் மாதத்தில் சராசரியாக தினந்தோறும் 18 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் ரஷியாவிடமிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 28.2 லட்சம் பீப்பாயும் ஆகஸ்ட் மாதத்தில் 20.8 லட்சம் பீப்பாயும் இந்தியா இறக்குமதி செய்ததாக கெப்லா் நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

இந்தியாவின் தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் சவூதி அரேபியாவிடமிருந்து ஒரு நாளைக்கு 3.47 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நிலையில் செம்படம்பரில் இது 5.76 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆகஸ்டில் 5.46 லட்சம் பீப்பாயும் செப்டம்பரில் 5.22 லட்சம் பீப்பாயும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஈராக்கிடமிருந்து ஆகஸ்டில் 1.63 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. செப்டம்பரில் இது 5.05 லட்சம் பீப்பாயாக அதிகரித்தது.

Advertisement

Advertisement

இதன்மூலம் கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்ட இந்தியா அதை ஈடுகட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கெப்லா் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளா் நிகில் துபே கூறுகையில், ‘ஏற்றுமதி உள்கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக்கொண்டது. ரஷியா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க உத்தரவு அமலானால் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மேலும் குறைய வாய்ப்புள்ளது.

ஆனால் இந்தியா தனது கொள்முதலை கணிசமாகக் குறைக்கும் முடிவெடுத்தால் மாற்று விநியோகங்களுக்காக ஆசிய மற்றும் பிற சுத்திகரிப்பு ஆலைகளுக்கு இடையே போட்டி அதிகரிக்கும். இது கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments