FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்தியாயம் - 20

திருமண உறவின் காரணமாக மட்டுமே சேர்ந்து வாழும் தம்பதிகள் சிலர், அன்பற்ற மணவாழ்க்கைக்குள் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழுகிறார்கள்.

9 செப்டம்பர் 2025, 10:38 am
பகிர்:

திருமண உறவின் காரணமாக மட்டுமே சேர்ந்து வாழும் தம்பதிகள் சிலர், அன்பற்ற மணவாழ்க்கைக்குள் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழுகிறார்கள். அவர்கள் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மாட்டிக்கொண்டது போல் இருக்கிறார்கள். மண வாழ்க்கை என்பது இப்படி சகித்துக் கொள்வதல்ல, அதை சந்தோஷமுள்ளதாக ஆக்கிக் கொள்வது சாத்தியமே.

திருமண வாழ்க்கையில் இன்பமும் துயரமும் உண்டு. அது மகிழ்ச்சியையும் துயரத்தையும் பரசவசத்தையும் சேர்த்து எல்லாவற்றையும் தரும் உறவுதான் அது. இன்பமும் துன்பமும் வாழ்வின் இருபக்கங்கள். எவ்வளவு பெரிய பிரச்னைகள் தம்பதியருக்கிடையே வந்தாலும் அதை எல்லாம் மீறி சமாளித்து ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் இறுதி வரை இருக்க முடியும்.

உங்களுடைய தாம்பத்தியத்தில் எதாவது பிரச்னையா? நேசமும் சந்தோஷமும் நிறைந்து தளும்பிய உங்கள் வாழ்க்கையில் தற்போது பிரச்னைகள் பூதாகரமாக வெடித்து கண்ணீரும் காயமுமாக மாறிவிட்டதா? கவலை வேண்டாம். இவை தற்காலிகமே என்று நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் பழைய மகிழ்வான மண வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் பொறுமையையும் தளராத மனத்தையும் கொண்டிருக்க வேண்டும். விடா முயற்சியை இயல்பாகவே பெற்றிருக்க வேண்டும். அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும். இறைவனிடம் பூரணமாக உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். அடுத்து உங்கள் துணைவரிடம் சரணடைந்துவிட வேண்டும். அதெப்படி நம்மை துயரக் கடலில் தள்ளிய ஒருவருடன் சரணடைய முடியும்? முன்பு அவர் தானே நமக்கு எல்லாமாகவும் இருந்தார். இப்போது பிரச்னை என்று வந்துவிட்டதால் வெறுக்கத்தக்கவராக மாறிவிட்டாரா? முன்பு மலர்ந்து மணம் வீசியது இப்போது சகிக்க முடியாததாக மாறிவிடுமா என்ன? மாற்றம் அவரில் இல்லை, உங்கள் மனத்தில் தான். இதைத்தான் மைண்ட் செட் என்று சொல்வார்கள். நீங்கள் முன் முடிவுகளுடன் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் போது ஒருவரை தலையில் ஏற்றிக் கொண்டாடுவதும் அவர்களிடம் பிணக்கு ஏற்படும் போது ஒரேடியாகத் தரையில் தூக்கிப் போடுவதுமாக இருந்தால் எப்படி? சமன்நிலை தொலைநோக்குப் பார்வை ஆகிய பக்குவம் திருமண உறவில் நிச்சயம் தேவை. எனவே உங்கள் துணையை பூரணமாக நம்புங்கள். எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாத அன்பை பொழியுங்கள். பூரணமற்ற கணவனோ மனைவியோ ஒரு பூரணமான திருமண வாழ்வை அனுபவிக்க முடியாது என்ற தெளிவை அடையுங்கள்.

Advertisement

Advertisement

மணவாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் அதனால் ஏற்படும் மனக்காயங்கள், துயரங்கள் ஆகியவற்றை சரி செய்வது எப்படி? உங்களுக்கு வரும் பிரச்னைகளையும் துயரங்களையும் உங்களாலோ அல்லது வேறு யாராலோ தடுக்க முடியாது ஆனால் அவற்றை நீங்கள் மறுக்க முடியும். எப்படி? அது ஒரு எளிய பயிற்சிதான்.

இந்த உலகத்தில் பிறந்து அத்தனை மனிதர்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் துன்பம். ஒரு நாள் அது நமக்கும் வரத்தானே செய்யும். எப்போதும் மகிழ்வாக யாருமே இருப்பதில்லை. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது இதைத் தான். எந்த ஒரு துயரமும் நமக்கு மட்டும் தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். துயரத்தை உணர்ந்து அதிலேயே துவண்டு கிடந்தால் மீள வழியிருக்காது. நான் தூக்கி வளர்த்த துயரம் நீ என்ற ஒரு கவிதை வரிகளை நினைத்துப் பாருங்கள். துயரத்தை துயரோடு சுமக்கிறவர்கள் தான் அதிகமாக துயரடைகிறார்கள். தாங்கிக் கொள்ள முடியாத துயர் என்று எதுவுமே இல்லை.

மண வாழ்க்கை துயரமானது, நெருக்கடியானது, கடினமானது, போராட்டம் நிறைந்தது என்று எல்லாம் எண்ண வேண்டாம். உள்ளதை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகினால் எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் பக்குவம் நமக்கு ஏற்படும். பிரச்னைகளின் தன்மையை புரிந்து கொண்டு அதற்காக உங்கள் உடலையும் மனதையும் தயார்படுத்தி கொள்ளுங்கள். அவை வந்த திசை தெரியாமல் விலகிவிடும்

Life is a Game, enjoy it என்று ஒரு ஆங்கில சொலவடை உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் தன்மீது நம்பிக்கை உள்ள ஒரு விளையாட்டு வீரன் திடீரென்று ஏதோ ஒரு காரணத்தால் தோல்வி அடைய நேரிட்டால் அவன் அப்படியே உடைந்து போவதில்லை. அதை பக்குவமாக கையாள அவனுக்குத் தெரியும். விளையாட்டு கற்றுக் கொடுத்த பாலபாடம் அது. தோல்விகளையும் ஏற்றுக்கொண்டு அதை மனத்திலிருந்து உதறிவிட்டு அடுத்தடுத்த போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வான். புதிய வேகத்துடனும் உறுதியுடனும் அடுத்தடுத்து விளையாடுவான். இப்படித்தான் அனைவரும் வாழவேண்டும். நெருக்கடிகளை சவால்களாக ஏற்கும் மனோபவம் வந்து விடும் மேலும் பெரிய சவால்களை, மனம் விரும்பி வரவேற்கும். அதே போல வாழ்க்கையை ஒரு விளையாட்டு போட்டியாக நினைத்து சந்தோஷத்துடன் விளையாடும் மனோபாவம் வந்துவிட்டால் நீங்கள் வாழக் கற்று கொண்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். திருமண உறவில் மட்டுமின்றி வாழ்க்கையில் எந்த சிக்கலுக்கும் இந்த வகை மனப்பான்மை உதவும். எதையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் சுபாவம் இருந்தால் போதும் சுமையான வாழ்வு கூட சுகமாகும்.

தங்கத்தை சுத்தமாக்கவும், வைரத்தை பட்டை தீட்டவும் என்ன செய்கிறார்கள்? அதற்குத் தேவையான ப்ராஸஸ் செய்கிறார்கள். அதீதமான குளிரிலும் வெப்பத்திலும் மாற்றி மாற்றி வதைக்கிறார்கள். அது போலத் தான் வாழ்க்கை. தக்கன நிற்கும் அதாவது தகுதியுள்ளவை மட்டுமே தொடரும் என்பது தானே உயிரின் பரிணாம தத்துவம். எனவே நெருக்கடிகளை பிரச்னைகளை எதிர்கொண்டாலும் அதை புறம் தள்ளி வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனக்கு மட்டும் தான் இந்த துயர், நான் மட்டும் ஏனிப்படி கஷ்டப்பட வேண்டும் என்ற கழிவிரக்கம் கூடாது. முக்கியமாக துன்பம் வரும்போது கலக்கமோ நடுக்கமோ கூடவே கூடாது. சொல்வற்தற்கு எளிதாக தோன்றினாலும் கடைப்பிடித்துப் பாருங்கள் மாற்றம் நடக்கும் அதிசயத்தைக் காண்பீர்கள். ஆயிரம் பிரச்னைகள் எதிரே வந்தாலும் அவற்றை அமைதியாக பதற்றமில்லாது தயங்காமல் தளராமல் போராட்ட மனோபாவத்துடன் எதிர்கொள்ள வேண்டும். காலப்போக்கில் அவை சரியாகிவிடும். ஒருவர் மற்றவர் கரங்களைப் பிடித்து மன்னிப்பு கேட்கும் அதிசயமும் நடக்கும்.

இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும்போது, இதில் எந்த குறிப்பு உங்களுடைய மண வாழ்க்கைக்குப் பொருத்தமானது என்பதை கண்டுகொள்ள முயலுங்கள். துணைவரின் குறைபாடுகளையே எப்போதும் துருவித்துருவி பார்த்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, உங்களால் பின்பற்ற முடிகிற சில குறிப்புகளைத் தெரிந்தெடுத்து பின்பற்றுங்கள். அப்போது, உங்களுடைய மண வாழ்க்கை மலரும் என்பதற்கு நீங்கள் நினைத்ததைவிட அதிக நம்பிக்கை இருப்பதை காணலாம்.

உங்களுடைய திருமண ஓட்டத்தை சீராக்க எவ்வித சிக்கலும் இல்லாமல் நடத்த விரும்பினால், அதை நீங்கள் எதிர்காலக் கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம். இரண்டு உள்ளங்கள் இணைபிரியாமல் சேர்ந்திருக்க செய்வதற்கே இறைவன் மண வாழ்க்கையை உருவாக்கி உள்ளான். ஆகவே, உங்கள் கணவரோடு அல்லது மனைவியோடு உங்களுக்கு இருக்கும் பந்தம், ஏதோ ஒரு பிடிக்காத வேலையை வேண்டாம் என்று விட்டுவிடும் விஷயம் இல்லை. ஒப்புக்காகவோ வாழ்வது வாழ்க்கையே இல்லை. அல்லது ஒப்பந்தத்திற்காக மண வாழ்வை ஆரம்பித்து அது தொடர முடியாமல் முறித்துக்கொண்டு போவதும் இல்லை அது. ஒரு வீட்டை காலிபண்ணி போய்விடும் விஷயமும் அல்ல. மாறாக, வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுடைய துணையோடு சேர்ந்து வாழ்வீர்கள் என்றே திருமணம் செய்துகொண்டபோது மனப்பூர்வமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள். அந்த திருமண உறுதிமொழியை என்றென்னும் மனத்திலிருந்து அழியாமல் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

பேசலாம்…!

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments