FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்தியாயம் - 21

‘போதும் உன்னோட குப்பை கொட்டினது, மனுஷன் வாழுவானா உன் கூட என்று கணவர்கள் சில குடும்பங்களில் கோபத்தில் கத்துவார்கள்.

9 செப்டம்பர் 2025, 10:38 am
பகிர்:

‘போதும் உன்னோட குப்பை கொட்டினது, மனுஷன் வாழுவானா உன் கூட என்று கணவர்கள் சில குடும்பங்களில் கோபத்தில் கத்துவார்கள். ’என்னால இனிமே உங்ககூட வாழ முடியாது,” என்று மனைவியும் அதிகம் யோசிக்காமல் அடிக்கடி சொல்லலாம். இவர்கள் ஆத்திரத்தில் இப்படி சொல்லிவிட்டாரகளே தவிர சொன்னபடி செய்யப்போவதில்லை. ஆனாலும் பிரிவின் ஆரம்பச் சொற்கள் இவை. அவர்களை அறியாமலேயே மனத்திலிருந்த வார்த்தைகள் வெளிவந்துவிடுகின்றன. இத்தகையவர் இப்போது இல்லையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் பிரிந்துவிடலாம். மண வாழ்க்கையில் எப்போதும் அமைதியும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் இத்தகைய அச்சுறுத்தும் அல்லது மிரட்டும் தொனியில் பேசுவதை விட்டுவிடுங்கள். திருமணம் செய்தது சந்தோஷமாக வாழத்தான் விட்டு விலகி தனித் தனித்தீவாக தேங்கிவிடுவதற்கு அல்ல.

சஞ்சனா ஒரு விளம்பர நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர். அவர் கணவர் வாசுதேவன் வங்கி அதிகாரி. இருவருக்கும் நேரம் என்பது தான் பிரச்னை. வாசுவுக்கு நேர ஒழுங்கு மிகவும் முக்கியம். ஆனால் சஞ்சனாவின் வேலை அப்படி இருக்காது. சில சமயம் இரவு பத்து அல்லது பதினொரு மணிக்குக் கூட வீடு திரும்புவாள். சுயமாக யோசிக்கும், முடிவெடுக்கும் பழக்கமுள்ள சஞ்சனாவால் பழமைவாதியான வாசுவுடன் எதிர்வாதம் செய்ய முடிவதில்லை. தன் கணவனின் ஏச்சுப் பேச்சுக்களை சகித்துவந்த சஞ்சனாவுக்கு ஒரு கட்டத்தில் அலுத்துவிட்டது. மீடியா வேலையை விடு என்று சொன்ன வாசுவையும் இந்த திருமண வாழ்க்கையையும் விட்டுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அவளுடைய மாமியார் மணிமேகலை சஞ்சனாவை நன்கு புரிந்து வைத்திருந்தார். பெண்களுக்கு வேலை மிகவும் முக்கியம். பணம் முக்கியம் தான் அதைவிட சமூகத்திலும் குடும்பத்திலும் கிடைக்கும் மரியாதை அதைவிட முக்கியம். எனவே வேலையை விட்டுவிட வேண்டாம். வாசுவிடம் நான் பேசுகிறேன் என்றார். சொன்னபடி அதையே செய்தார். சஞ்சனா என்னிடம் சொன்னது எங்களுக்குள்ள பெரிய பள்ளம் உருவாயிடுச்சு. சொன்ன பேச்சு கேட்கறதில்லை. டைம் டிசிப்ளின் கிடையாது. எப்பவும் இவ வேலையைப் பாக்கறதுக்கு ஒரு ஆள் தேவைன்னு ஏதாவது குறை சொல்லிட்டே இருக்க ஆரம்பிச்சார். ஆபிஸ்ல வெளியில எனக்கு ஏக மரியாதை ஆனா சொந்த வீட்ல இவர்கிட்ட தினமும் ஏதாவது ஒரு திட்டு. என்னோட இயல்பை மாத்திக்க முடியாதுன்னு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவரால என்னை சரியா புரிஞ்சிக்க முடியலை. அத்தை சொன்ன மாதிரி கடைசியில யார்கிட்ட குறை இருந்தாலும், எப்படியாவது அதை சரிபண்ணத்தான் பார்த்தோம். பனிபோரோட ஒன்றரை வருஷம் எப்படியோ ஓடிடுச்சு. ஆனா இப்ப என்னாலேயே நம்ப முடியலை. நாங்க இப்ப பெட்டர் கப்பிளா வாழறோம்” என்றாள். எனவே வாழ்க்கையில் ஒருபோதும் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. எதுவும் தொலைந்து போவதில்லை, இழந்தாகிவிடுவதில்லை. உங்கள் துணையை மதித்தல்

நாம் ஒரு விஷயத்தை நேசித்தோம் எனில் அதை ஒருபோதும் விட்டுவிட மாட்டோம். அதை பத்திரமாக பொத்தி வைத்திருப்போம். பிடித்த பேனா, பிடித்த புத்தகம், பிடித்த நகை, பிடித்த வாகனம் என்று பொருள்களிலும் இந்தப் பட்டியல் தொடரும். அதே போல தான் உறவு நிலைகளும். எதையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தால் தான் நீடித்திருக்கும். எது நடந்தாலும் மாறாத அன்பும், ஒருத்தருக்கொருத்தர் நலனில் அக்கறையும் இருக்கையில் பிரிவென்பதே அவ்வுறவில் இருக்காது..”

Advertisement

Advertisement

பிரச்னைகள் என்பது யாருக்குத்தான் இல்லை. ஆனால் அதையும் மீறி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் திருமண வாழ்க்கையில் அன்பு சூழ வாழ்ந்திருந்தால் பிரச்னையை பூதக்கண்ணாடியில் பார்க்காமல் விரைவில் தீர்வைத் தேடிவிடுவார்கள். யாருமே ஆதர்ச தம்பதியர் கிடையாது. அனைவரின் மண வாழ்விலும் எப்போதாவது கருத்து வேறுபாடு ஏற்படத் தான் செய்யும். ஆனால் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும் நேர் எதிர் துருவங்களாக சில தம்பதியர் இருப்பார்கள். அவர்களுக்குள் அன்பு முகிழ்க்காது. சின்ன காரணம் கிடைத்தால் கூட போதும், வாதம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் எதிரிகளைப் போல ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொள்ளாமலும் பேசாமலும் கூட ஒரே வீட்டில் இருப்பார்கள். சமூகத்துக்காக ஒன்றாக வாழ்வது போல நடிப்பார்கள். இவர்கள் தாங்களே மனம் மாறி ஒரு அன்பு நிலைக்கு வந்தால் தான் உண்டு. அல்லது சூழ்நிலை, வாழ்வியல் மாற்றங்கள் என்று ஏதோவொரு காரணத்தால் இணையலாம். ஆனால், அப்படி எதுவும் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஏதாவது ஒரு புள்ளியில் வெறுத்துப் போய் பிரிந்துவிட அதிக வாய்ப்புக்கள் உள்ளது. காரணம் வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு முக்கியமான தேவை பேச்சு. கணவனும் மனைவியும் தங்களுடைய விருப்பு வெறுப்புக்களை, கோபங்களை, கஷ்ட நஷ்டங்களை பேசியும் பகிர்ந்தும் வாழ்ந்தால் தான் அவர்களுக்குள் ஒரு அன்னியோனியம் இருக்கும். பேசா மடந்தைகளாக இருந்தால் எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் அவர்களின் மண வாழ்க்கை முடிந்துவிடக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே தங்கள் உறவின் மீது நம்பிக்கையும் பிடிப்பும் இருந்தால் கருத்து வேறுபாடுகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து விரைவில் சரி செய்துவிடுவார்கள்.

ரமா தன் கணவன் ராகவன் தனக்காக எதுவும் செய்வதில்லை. நேரம் செலவிப்பது கூட இல்லை என்று அடிக்கடி சொல்வதால் ராகவனுக்கு அவள் மீது எரிச்சல். தனக்காக எத்தனை மணி நேரம் கணவர் தன் நேரத்தை செலவழிக்கிறார் என்பதல்ல ரமாவின் பிரச்னை. தன்னை ராகவன் புறக்கணிப்பதாக அவள் மனத்துக்குள் தோன்றி, அந்த எண்ணம் ஆழமாக மாறி தன்னை எதற்கும் ராகவன் மதிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாள். ராகவனைப் பொருத்தவரையில் ரமா அதிகம் செலவு செய்வதாக அவள் மீது ஒரு புகார் சொல்லிக் கொண்டிருப்பார். அதுவும் தன்னிடம் சொல்லாமல் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது. தேவையே இல்லாத பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்கவதாக ஆத்திரப்படுவார். ரமா செய்த செலவுகள் அவருக்கு உறுத்தவில்லை. ஆனால் அவளே அதை முடிவெடுத்து கடைக்குப் போகாமல் இவரிடம் கலந்து பேசாமல் இஷ்டத்துக்கு ஆன்லைனில் வாங்கிவிடுவது அவருக்கு தன்னை அவள் அலட்சியப்படுத்துகிறார் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிட்டது. இப்படி ஒருவருக்கொருவர் குற்றப் பட்டியல் வாசித்து ஒருகட்டத்தில் பெரிய சண்டை உருவாகி இருவரும் பிரியும் அளவிற்கு விரிசல் ஏற்பட்டது. கடைசியில் ரமாவின் அண்ணன் இருவரிடமும் பேசி என்னிடம் கவுன்சிலிங் அழைத்துவந்தபின் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் இருந்த இடைவெளி குறைந்தது.

காதல் திருமணத்திற்கு முன் காதலர்கள் ஒருவரையொருவர் எப்போதும் நினைத்துக் கொண்டும் நேசித்துக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் அதே திருமணத்திற்குப் பின் இருக்காது. காரணம் ஒருவர் மற்றவரை பிரிந்து இருக்காமல் ஒரே இடத்தில் இருக்க முடிவதினால். ஆனால் சில தம்பதியர் இதைக் கூட புரிந்து கொள்வதில்லை. நீங்கள் நினைத்த விதத்தில் மணவாழ்க்கை இல்லையென்றால் சோர்ந்துபோய்விட வேண்டாம். நல்ல புரிதல் இருந்தால் நண்பர்களைப் போல நட்புடன் தோழமையுடன் இந்த வாழ்க்கையை கடந்துவிடலாம்.

‘என்னால் இனி சமாளிக்கவே முடியாது!’ என்று ஆகிவிட்ட நிலையில் என்ன தான் செய்வது?

பேசலாம்..

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments