FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்தியாயம் - 23

’பொன்னான வாழ்வே மண் ஆகிப் போமா, துயரம் நிலைதானா உலகம் இதுதானா?’ என்று நினைத்து இப்படி எனக்கு நேர்ந்துவிட்டது என்று மனம் உடைந்து போவதில் பயன் ஒன்றும் இல்லை.

9 செப்டம்பர் 2025, 10:38 am
பகிர்:

’பொன்னான வாழ்வே மண் ஆகிப் போமா, துயரம் நிலைதானா உலகம் இதுதானா?’ என்று நினைத்து இப்படி எனக்கு நேர்ந்துவிட்டது என்று மனம் உடைந்து போவதில் பயன் ஒன்றும் இல்லை. அந்தக் காலத்தில் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தபடியால் கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் நீ பொருத்துப் போ என்று தான் சொல்லி புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். வாழ்வோ தாழ்வோ சாவோ அவனுடன் தான் என்பது எழுதப்படாத சட்டம். ஆனால் மாறி வரும் காலகட்டங்களில் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பையும் நிம்மதியையும் அதை விட மகிழ்ச்சியையும் தர வேண்டிய ஒன்று. ஆனால் வேலியே பயிரை மேய்வதைப் போல திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை பேரிடராக மாறுவதுண்டு. கணவன் சரியில்லை எனில் அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. இதைத் தவிர்க்க தவறான துணையிடமிருந்தும் மனம் பொருந்தாத திருமண வாழ்விலிருந்து வெளியேறுவது தான் சிறந்தது. சிக்கி விட்டோமே என்று வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விட்டு கடைசி காலத்தில் சாகும் தருவாயில் துணையிடம் ஒரு வார்த்தை கூட பேச மனம் கசந்து இறந்து போய்விடுவதில் என்ன இருக்கிறது? ஒரு முறை தான் இங்கு வாழ்க்கை. அது நமக்கு ஆகப் பெரிய மகிழ்ச்சியைத் தராவிட்டாலும் துன்பக் கேணியில் தொடர்ந்து தத்தளிப்பது தேவையே இல்லாதது.

விவாகரத்து கிடைத்துவிட்டதும் வெறுமையும் கசப்புமாகத் தான் நாட்கள் நகரும். உலகமே இருண்டு கிடப்பது போலத்தோன்றும். உலகிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, தான் மட்டும் துயரத்தை அனுபவிக்க நேருகிறதே என்று மனம் சுக்கு நூறாக உடைந்து போகும். இது மாதிரி சமயங்களில் தவறான முடிவுகளை எடுக்கவே கூடாது. இனிமேல் என்ன இருக்கிறது என் வாழ்க்கையில் என்று பெண்கள் குடிப் பழக்கத்திற்கும் போதை பழக்கத்திற்கும் அடிமை ஆகிறார்கள். அது தவறு. மனதை பலகீனமாக வைத்திருந்தால் இப்படிப்பட்ட நெகட்டிவ் விஷயங்கள் உள்ளே சென்றுவிடும். யாரும் உங்கள் மீது பரிதாபப் படும் வகையில் நடந்து கொள்ளவே கூடாது. காரணம் உதவுகிறேன் என்று சொல்லி நிலைமையை மோசமாக்கும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு மணவாழ்க்கைக்குள் செல்ல ஒருபோதும் அவசரப்படக்கூடாது. அவர் செய்துவிட்டார் எனக்கென்ன நானும் அப்படிச் செய்வேன் என்று அவசரப்பட்டு தவறான நபரை மீண்டும் வாழ்க்கையினுள் அனுமதித்துவிடக் கூடாது. உங்களுடைய ரகசியம் உங்களுக்கானது. அனைவரிடமும் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரிடம் சொல்லலாம் யாரிடம் சொல்லவே கூடாது என்ற தெளிவு இருக்க வேண்டும்.

விவாகரத்து ஆனவள் என்று யாரேனும் காது பட பேசினால் கூட டோண்ட் கேர் என்ற மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும். பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களின் பொழுது போக்கு அது என்பதால் அதை உதாசினப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். காரணம் அதைக் கேட்டால் உங்களுக்கே உங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடும். உண்மை தான் போல நான் ராசியானவள் இல்லை, என்னால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை, நான் வாழ்வதே பூமிக்கு பாரம் என்று தேவையில்லாத தாழ்வு மனப்பான்மையும் சுய வெறுப்பும் உருவாகிவிடும். எனவே இவை தலைதூக்காமல் இருக்கப் பழகுங்கள். மற்றவருடைய ஏளனத்தையும் சரி அனுதாபத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்கள் பழைய வாழ்க்கையை ஒரு மிக நீண்ட கெட்ட கனவாக நினைத்து மனத்தின் ஆழத்தில் புதைத்து விடுங்கள். அது ஒரு போதும் வெளிவரமுடியாதபடி இறுக்கத் தாழிட்டு சாவியைத் தொலைத்துவிடுங்கள். அது தான் நம்மை மீட்டெடுக்க ஒரே வழி.

Advertisement

Advertisement

அதற்கு நிச்சயம் ஒரு 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை தேவைப்படும். இந்த காலகட்டத்திற்குப் பிறகு தான் உண்மையில் உங்கள் வாழ்க்கை தொடங்குகிறது என்று பாசிட்டிவாக நினைக்க வேண்டும். உங்களுக்கென ஒரு சிறிய நெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கான மனிதர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணிபுரிபவர் என யாராகவும் இருக்கலாம். ஆனால் உண்மையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம். எந்தவொரு விஷயத்தையும் சரியான கோணத்தில் பார்க்கும் நபர்களுடன் மட்டுமே பழகுங்கள். மிகவும் உறுதியான மனத்துடன் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி நன்கு யோசித்து தன் வாழ்க்கையை சமன் நிலைக்குக் கொண்டு வர பாடுபடுங்கள். உங்களை நீங்களே பாரபட்சமின்றி சுய அலசல் செய்யுங்கள். நிதானமாக மனத்தை தெளிவாக்கி அதன் பின்பே எதையும் செய்ய வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவு எடுத்தாலும் இந்தச் சமயத்தில் அது சரியாக வராது. ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து தான் ஒவ்வொரு அடியையும் வைக்க வேண்டும். அதற்காக வாழவே பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகும் என்ற ஒற்றை நம்பிக்கையை கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பயணம் அமைந்துவிட்டால் அது நிச்சயம் வெற்றிப் பாதைக்குத் தான் உங்களை இட்டுச் செல்லும்.

முன்பு கூறியபடி, திருமண உறவு கசந்து வெளியேறி கடினமான அந்தப் பதினைந்து நாட்களை கடந்துவிட்டால் போதும் அதன்பின் மனம் புயலுக்கு பின்னால் வரும் அமைதி போல தெளிவாக சிந்திக்கும். தனக்கு எது தேவை, இந்த உறவில் செய்த பிழைகள் என்ன, பிரிவில் நம்முடைய பங்களிப்பு என்ன, இனி அந்தத் தவறுகள் நிகழாத வண்ணம் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள என்ன வழிமுறைகள் என்று யோசிக்க வேண்டும். இன்னொரு திருமண வாழ்க்கைக்கு மனம் உடனடியாக தயார் ஆகாது. தவிர ஒரு தடவை தோற்றுப் போய்விட்டோம் என்ற தயக்கம் வேறு அதிகமாக இருக்கும்.

மீனாவுக்கு முரளிக்கும் திருமணம் விமர்சையாக நடந்தது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் முரளி மிகவும் மோசமாக மீனாவை நடத்தியதால் திருமணமாகி மூன்றே மாதத்தில் வெளியே வந்துவிட்டாள் மீனா. சோர்ந்து முடங்கிக்கிடந்த அவளைப் பார்க்கச் சகிக்காத அவளுடைய பெற்றோர் மறுபடியும் ஒரு திருமண ஏற்பாட்டைச் செய்தார்கள். ராஜன் நல்லவன். மீனாவிடம் மிகவும் அன்புடன் நடந்து கொண்டான் ஆனால் இந்த இரண்டாவது திருமணமும் மீனாவுக்குத் தோல்வி தான். ராஜனுக்கு ஆண்மை குறைபாடு என்பது தெரிந்த மீனாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இந்த திருமண உறவிலிருந்தும் வெளியேறிவிட்டால் உலகம் தன்னைத் தான் காறி துப்பும் என்று மனம் உடைந்துபோனாள். இது விதியா அல்லது ஜாதகப் பிரச்னையா ஏன் இப்படி தனக்கு தோல்வி ஏற்பட்டது பேசாமல் செத்துவிடலாம் என்று நினைக்க ஆரம்பித்த விட்ட நிலையில் என்னிடம் கவுன்சிலிங் வந்தாள்.

அவளிடம் நான் சொன்னது இது தான். இந்த ரெண்டு வாழ்க்கையிலும் உன் தவறு என்று எதுவுமே இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவள் நீ தான். இதிலிருந்து மீள சில மாதங்கள் ஆகலாம் ஆனால் பொறுமையாக நான் சொல்வதைக் கேள் என்று சொல்லி அவளுக்குத் தொடர் கவுன்சிலிங் தந்தேன். இப்போது ஓரளவு தேறி வருகிறாள். ஆனால் முழுவதும் பழைய நிலைக்கு வருவதற்கு நாளாகும்.

எனவே இரண்டாம் திருமணம் செய்ய பெற்றோர்களும் சரி சம்மந்தப்பட்ட பெண்ணும் சரி அவசரமே படக் கூடாது.

பேசலாம்

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments