FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்தியாயம் - 24

இரண்டாவது திருமணங்களில் மணமுறிவுகள் முதல் திருமணத்தை விட அதிகம். எனவே அதிக கவனம் தேவை.

9 செப்டம்பர் 2025, 10:38 am
பகிர்:

இரண்டாவது திருமணங்களில் மணமுறிவுகள் முதல் திருமணத்தை விட அதிகம். எனவே அதிக கவனம் தேவை. இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்  பல உள்ளன.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் முதலில் செய்ய வேண்டியது முதல் திருமணத்தின் பிரச்னைகளை முற்றிலும் சரி செய்வது தான். உங்கள் கணவர் அல்லது மனைவியைப் பிரிந்து போதிய இடைவெளி விட்ட பின்னர் தான் அடுத்த மண வாழ்க்கைப் பற்றிய முடிவு செய்ய வேண்டும்.  காரணம் புதிய வாழ்க்கையில் பழைய நினைவுகள் வரும் போது அதை சமாளிக்க மனத்தில் தெம்பிருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு பழைய வாழ்க்கையிலும் வாழ முடியாமல் புதிய ஒன்றிலும் பொருந்த இயலாமல் தவிக்கக் கூடாது. கடந்தவை இனி திரும்பி வரப்போவதில்லை. எதிர்கொள்ளும் வாழ்க்கையின் இனிமைகளை மட்டும் நினைவில் ஏற்றி அதற்கேற்ப மனத்தை தயார்படுத்திக் கொள்வது ரொம்ப அவசியம். இப்படி மன ரீதியாக முடிவெடுத்துவிட்டீர்கள் என்றாலே, பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். இப்போது சட்ட ரீதியான, குடும்ப ரீதியான, சமூக ரீதியான பிரிவுகளையும் நிகழ்த்த வேண்டும். வாழ்க்கை மீண்டும் புதியதாக உற்சாகமானதாக இருக்க வேண்டும்.

பிரிவுக்கு நான் காரணமல்ல என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். கடந்த திருமண பந்தத்தில் என்ன தவறு செய்தீர்கள் என்பதை தயவு தாட்சண்யம் இல்லாமல் சுய அலசல் செய்து கண்டறியுங்கள். அது ஏன் முறிந்தது என்பதை மிக மிக அமைதியாக ஆழமாக சிந்தியுங்கள். இனி அதே தவறுகள் இந்த முறை செய்யப் போவதில்லை எனும் முடிவை எடுங்கள். இது மிகவும் முக்கியம்.

Advertisement

Advertisement

குத்திக் காட்டிப் பேசும், அல்லது பழைய வாழ்க்கையை அதிகம் நினைவுப்படுத்தும் பழைய உறவின் சொந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விலக்கி விடுங்கள்.  உங்கள் பழைய சிந்தனைகளையும், வலிகளையும் கிளறும் எந்த உறவையும் அனுமதிக்காதீர்கள்.

முதல் திருமணத்தில் நீங்கள் இழந்ததாய் நினைத்ததைப் பெறப் போகும் வாழ்க்கை தான் இரண்டாவது திருமணம்.இருந்ததும் போச்சே” எனும் நிலை வரவே கூடாது என்பதில் கவனம் தேவை. அதற்காக உங்கள் வருங்காலக் கணவரைப் பற்றி முழுமையாய் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். அவருடைய கடந்த காலம், குடும்பம், சூழல், சிந்தனைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது என்று சற்றே சந்தேகம் எழுந்தாலும் விட்டு விடுங்கள். முழுமையான நம்பிக்கை, சந்தேகமற்ற மனம் இரண்டும் மிக மிக முக்கியம்.

உங்களைப் பற்றி உங்கள் வருங்காலக் கணவரிடம் முழுவதும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், உங்கள் குணநலன்கள், பிரச்னைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றையும் வெளிப்படையாகவே பேசிவிடுங்கள். குழந்தை வேண்டுமா வேண்டாமா என்பது தொடங்கி, அடுத்தடுத்து வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது வரை பல விஷயங்களைப் பேசி தெளிவு செய்து கொள்வது மிகவும் நல்லது. ஒரு முறை தவறாக வாழ்க்கை முடிந்து போனால் அது மொத்தமாக முடிந்துவிட்டது என்று அர்த்தம் ஆகாது. இன்னொரு வாழ்க்கை இன்னொரு வாசல் திறந்துள்ளது, மனத்தை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே.

ஆரம்பத்திலேயே பழைய வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டிய விஷயங்களை ரகசியம் ஏதும் இருப்பின் அதனை என்று எல்லாவற்றையும் பேசி விடுங்கள். ஏனென்றால் திருமணத்துக்குப் பின் விரும்பத் இதுப் போன்ற பேச்சுக்களை,  ரகசியங்களை புதியவர் விரும்ப மாட்டார். இது உங்கள் குடும்ப உறவைப் பாதிக்கும்.உங்கள் வருங்காலக் கணவருடன் திருமணத்துக்கு முன்பு “பிரீ மேரிடல்” கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டால் நல்லது.

திருமணம் முடிந்த பின் புது இடங்களுக்கு ஒரு ஜாலி ட்ரிப் செல்லுங்கள். புது வீடு, புதிய அக்கம் பக்கம், புதிய சூழல் என அமைவது ரொம்ப நல்லது. பழைய சிந்தனைகளும், கசப்புகளும் நிலைதடுமாறச் செய்யாமல் இருக்க இது உதவும்.

அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்குங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும் உற்சாகமற்றவராகவோ, குற்ற உணர்வுடையவராகவோ இருக்க வேண்டாம். அது தேவையும் இல்லை. உங்கள் மீது எந்த தவறும் இல்லாத போது, ஏதோ விதிப்பயனாக அல்லது தவறான துணையினால் உங்கள் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு பிரிந்துவிட்டால் இதில் உங்கள் குற்றம் என்பதுஎன்ன? எனவே இப்போதைய வாழ்க்கையே நிதர்சனம். உண்மை. அதை புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழுங்கள்.

புதிய வாழ்க்கையில் ஏதேனும் கண்டிஷன்கள் இருந்தால் அதை சரி என்று ஒத்துக் கொள்ள முடிந்தால் மட்டும் சம்மதியுங்கள். நன்றாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். அவை உங்களால் முடியும் என்றால்  ஒத்துக் கொள்ளுங்கள். முடியாதவற்றை முடியும் என்று சொல்லி பிரச்சினையில் மாட்ட வேண்டாம்.

முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் அதைப் பற்றியும் உங்கள் புதிய துணையுடன் பேசிவிடுங்கள். உங்கள் குழந்தைகளின் நலனின் அக்கறை கொள்பவராக அவர் இருக்க வேண்டியது மிகவும்முக்கியம். கணவரின் குடும்பத்தினரின் மனநிலையும் இதில் ரொம்ப அவசியம். பழைய குடும்ப வாழ்க்கையில் குழந்தையின் பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம். உங்களுடைய திருமண தேடுதல்கள் குழந்தைகளின் மனநிலையையோ, எதிர்காலத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் எழும்.

குழந்தைகளுக்கா கணவனுக்கா

மனைவி தனக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமென்பது கணவனின் ஆசையாக இருக்கும். குழந்தைகளுக்கோ தங்களுக்கே அம்மா முக்கியத்துவம் தரவேண்டும் என நினைப்பார்கள். இதில் சரியாக பேலன்ஸ் செய்ய முடிந்தால் வாழ்க்கை நலமாகும். எந்த நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பும், மன நலனும் மிகவும் முக்கியம். குழந்தைகளின் மனது எளிதில் காயப்பட்டுவிடும். நம்முடைய பிரச்னைகளை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்களுக்கான நேரத்தை, அவகாசத்தை தர வேண்டும். ஒரே நாளில் அவர்கள் புதிய ஒருவரை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடன் பொறுமையுடனும் அன்புடனும் பழகினால் மட்டுமே இது சாத்தியப்படும். புதியவர் இதில் எப்படி என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் உங்கள் குழந்தைகளிடம் அன்பாக இருந்துவிட்டு பின்னர் தனக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் உங்கள் குழந்தையை விலக்கினார் என்றால் அது மனத்தளவில் மிகவும் பாதிப்படையும். எனவே மிகவும் யோசித்து தான் உங்கள் திருமண வாழ்க்கையை சீர் செய்துகொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசர முடிவுகள் ஓரேடியாக உங்கள் வாழ்க்கையை பெரும் புயலில் மூழ்கடித்துவிடலாம். எனவே நின்று நிதானித்து நீங்களும் யோசித்து உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் இதைப்பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவதே நல்லது.

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments