FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்தியாயம் - 18

‘திருமணம் என்பது சரியான துணையை தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல; சரியான துணையாக இருப்பது’

9 செப்டம்பர் 2025, 10:38 am
பகிர்:

‘திருமணம் என்பது சரியான துணையை தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல; சரியான துணையாக இருப்பது’ இதை ஒவ்வொரு தம்பதியும் புரிந்து நடந்தால் பிரச்னைகள் குறையும். சசிகுமார் இந்துலேகா தம்பதிகளின் வாழ்க்கை இதை தான் உணர்த்தியது.

சசி, இந்துலேகா இருவரின் ஜோடிப் பொருத்தத்தை திருமணத்துக்கு வந்தவர்களில் புகழாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் திருமணம் முடிந்த அன்றே சசி இந்துவிடம் தான் ஏற்கனவே ராஜியைக் காதலித்ததையும் பெற்றோர் சம்மதம் இல்லாததால் அவளைத் திருமணம் செய்ய முடியாமல் போனது, அதன் பின் ராஜியின் வீட்டில் வற்புறுத்தி அவளுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது. தனக்கு அடுத்து இரண்டு தம்பிகள் இருப்பதால் வற்புறுத்தி மணம் செய்து வைத்துவிட்டார்கள் என்றான். தன் மனம் மாற சில வருடங்கள் ஆகலாம் அல்லது இப்படியே ஒரே வீட்டில் நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்லவும், இந்துவுக்கு அதிர்ச்சி. உண்மையில் இந்துவுக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லாததால் அதில் சிக்கிக் கொள்ளாமல் பெற்றோர்கள் பார்த்து வைத்த இந்த திருமணத்துக்கு முழு சம்மதம் தந்திருந்தாள். தவிர சசி பார்க்கவும் அழகாக இருந்ததால் அவள் திருமணத்திற்கு சந்தோஷத்துடன் ஒப்புக் கொடுத்தாள். நிச்சயமாகி வெகு சில வாரங்களில் திருமணம் முடிந்துவிட்டதால் தொலைபேசி எண்களை வாங்கிக் கூட பேச முடியாத நிலை என்ற வருத்தத்தில் இருந்தவளுக்கு சசியின் ப்ளாஷ்பேக் மனத்தை சுக்குநூறாக உடைத்தது. வேறு வழியில்லாமல் அவனிடம் ஆறுதலாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தூக்கம் வராமல் பல கேள்விகளுடனும் எதிர்காலம் குறித்த பயத்துடனும் இரவு முழுவதும் விழித்திருந்தாள்.

சசி அனைவரிடமும் நார்மலாகவே பேசினான். இந்துவிடமும் மரியாதையாக நடந்துகொண்டான். சினிமாவில் சீரியலில் பார்க்கும் காட்சி தன் சொந்த வாழ்க்கையில் நடக்கிறதே என்று இந்து தவித்தாள். அவளுடைய தோழி ரேவதியிடம் சில நாட்களில் இந்த விஷயத்தைச் சொல்லவே ரேவதி அவளிடம் மேரேஜ் கவுன்சிலிங் பற்றி சொல்லவும் இந்து எனக்கு போன் செய்து பிரச்னையைச் சொன்னாள். நான் தேதி கொடுத்து அவர்களை வரச் சொன்னேன். உண்மையில் அவர்கள் இருவரையும் பார்த்தால் பிரச்னையில் இருப்பவர்கள் என்றே சொல்ல முடியாது.

Advertisement

Advertisement

இருவரிடமும் தனித் தனியாக பேசினேன். முதலில் இந்துவிடம் சசி பழைய வாழ்க்கையை மறந்து உன்னிடம் வரும் போது அது பற்றி பேசி ஆறிய புண்ணை கிளறக்கூடாது முற்றிலும் புதிய வாழ்க்கைக்கு அவனை அன்புடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றேன். அதைத் தான் அவள் விரும்புவதாகச் சொல்ல சசி மீது அவளுக்கு இருக்கும் ஈடுபாடும் அக்கறையும் புரிந்தது. அடுத்து சசியிடம் பேசியபோது என்னிடம் வெளிப்படையாக நீங்கள் என்ன சொன்னாலும் என் மனம் மாறாது. இந்துவின் வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. நிச்சயம் அவளுக்கு நல்ல துணை கிடைத்தால் நானே வாழ்த்துவேன் என்று வசனம் பேச ஆரம்பித்தார். அவர் பேச நினைப்பதை முழுவதும் கேட்டபின் சில அறிவுரைகள் சொன்னேன். வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அத்தனை விஷயங்களும் நமக்கு கிடைக்காது. தவிர காதல் திருமணம் போன்ற விஷயங்களில் நம்மை மீறி சில சமயம் சூழல்கள் வென்றுவிடுவதுண்டு. அதை ஏற்றுக் கொண்டு அதன்படி அடுத்த கட்ட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதே புத்திசாலித்தனம். ஒரு இடத்தில் மனத்தை தேக்கி வைத்து விட்டால் அதன் பின் அதிலிருந்து மீள்வது மிகவும் கஷ்டம். ஏற்கனவே இரண்டு வருடங்கள் துயரத்தில் கழித்துவிட்டாய். நல்ல வாழ்க்கை, அருமையான மனைவி இவை தற்போது இறைவன் கொடுத்த வரம். அதை இழக்காதே. கிடைத்ததில் திருப்தி கொள் அதில் மகிழ்ச்சியை மீட்டெடு என்று தொடர் கவுன்சிலிங் மூலம் புரிய வைத்தேன். குடும்ப உறவுகளில் பலப்படுத்துவதில் முக்கியம் தம்பதியரிடையே அரவணைப்பு, ஒருவருக்கு ஒருவர் தரும் பாதுகாப்பு மிகவும் அவசியம். இத்தகைய பாண்டேஜ் திருமணம் முடிந்த ஆரம்ப காலகட்டத்தில் நடப்பதுதான் முக்கியம். அதுவே வாழ்நாள் முழுக்க சேர்த்து வைக்கும் பந்தமாகவும் இணைப்பாகவும் மாறும் என்று சொன்னதைப் புரிந்து அதன் பின் சிறுக சிறுக மனத்தை மாற்றிக் கொண்டு இந்துவுடன் இப்போது மிகவும் சந்தோஷமாக வாழத் தொடங்கிவிட்டார் சசி. திருமணத்தின் வெற்றி இருவர் ஒரே கூரையின் கீழ் வாழ்வது அல்ல, சந்தோஷமாக வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டுவதே அதன் நோக்கம். இதைப் புரிந்து கொண்ட பின் அவர்கள் வாழ்க்கையில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை.

இதில் இந்துவின் பொறுமையும் பக்குவமும் பாராட்டத்தகுந்தது. திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ மாற்றம் நிகழ்ந்துவிடாது என்பதை புரிந்து அதற்கேற்றபடி மனத்தை தயார்படுத்தி இருந்தாள். சசியின் மீது கூடுதல் அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதலுடன் காத்திருந்தாள். எல்லா தம்பதியருக்கும் இது பொருந்தும். இந்த ஐந்து மந்திரம் (அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல்) நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம். இல்லறம் நல்லறமாக இந்த ஐந்து மந்திரங்களும் மிகவும் முக்கியம்.

மேலும் குடும்ப வாழ்க்கை சிறக்க பொறுமை தேவை. உண்மையில் தம்பதியரின் வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படை விஷயம் ஆத்மார்த்தமான அன்பும், என்ன நடந்தாலும் மாறாத நம்பிக்கையும் மட்டும் தான். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில் நூலிழை அறுந்தாலும் இன்னொன்று தானாகவே அறுந்துவிடும். எனவே இவற்றை சரியாகப் புரிந்து கொண்டு நயமாக வாழ்க்கையை வாழ விழைய வேண்டும். அதையும் மீறி பிரச்னை ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி நமக்கு சாதகமான முடிவினை நோக்கி எடுத்துச் செல்வது என்பதை ஆராய்வது தான் புத்திசாலித்தனம். பெண்கள் அவசரப்படாமல் நிதானமாக தங்களின் பிரச்னையின் வேரை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்பட்டால் பாதிக்கும் மேற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தெளிவான மனத்தால் தான் அலசி ஆராய முடியும். ஏற்கனவே அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கும் போது தெளிவு எப்படி கிடைக்கும் என்று நீங்கள் கேட்டால் அது உண்மை தான். ஆனால் அது நிச்சயம் முயற்சி செய்தால் வரும் என்பதும் அதை விட உண்மை.

மேரேஜ் கவுன்சிலிங்கில் திருமணம் சார்ந்த பிரச்னைகள் மட்டுமன்றி திருமணத்திற்கு முன்பும் இருவருக்கும் கவுன்சிலிங் தரப்படும். நம்முடைய தனிப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கள் வேறு எதார்த்த நிலை வேறு என்று எடுத்துச் சொல்லி வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் தருவோம். திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருவருக்கும் மனத்தளவில் அதற்கு தயாராவது முக்கியம். கவுன்சிலிங் மூலம் நிச்சயம் அவர்களை ஓரளவு தயார் படுத்திவிட முடியும். வாழ்க்கையில் எந்த கட்டத்திலும் கவுன்சிலிங் தேவைப்படும் என்று நினைக்கையில், அதற்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதில்லை தவறு ஏதுமில்லை. நமக்குத் தெரியாத, அல்லது தெரிந்தும் நம் கண்களுக்குப் அப்போது தட்டுப்படாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மூன்றாம் நபரின் உதவி சில சமயம் தேவைப்படும் போது மனத்தடைகளைத் தவிர்த்து அதை ஏற்றுக் கொள்வது தான் அறிவார்ந்த செயல்.

பேசலாம்…!

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments