முகப்பு
டமால்… டுமீல்

பகுதி-24 டமால்... டுமீல்...

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் இரண்டாவது காருக்கும் அரசிடமிருந்து பெட்ரோல் கேட்கிறார்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் இரண்டாவது காருக்கும் அரசிடமிருந்து பெட்ரோல் கேட்கிறார்.

அப்துல் கலாம் உட்கார்ந்து அலங்கரித்த நாற்காலியே இவரை மாற்றவில்லை என்றால் என்னத்தைச் சொல்ல!

***

எழும்பூர் ஹால்ஸ் சாலைக்குத் தமிழ்ச் சாலை என்று பெயர் மாற்றம்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்துத் தமிழின் பெயர் பெற்றபின் சாலையில் கல்லும் மண்ணும் தோன்றாது இருக்குமா?

சிங்கத்தை வில் அம்பு கொண்டு வேட்டை ஆடிக் கொன்ற அமெரிக்க பல் டாக்டர் மீது வழக்கு.

அகோரமான சிங்கப் பற்களைக் காட்டி கர்ஜித்திருக்கும்.

ரூ. 40,000 செலவில் ஹிலாரி கிளின்டன் முடி அலங்காரம் செய்து கொள்கிறாராம்.

வெள்ளை மாளிகைக்கு மேட்சிங்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளவா?

பெண் டைரக்டர் இடம் பெறாத கம்பெனிகள் மீது நடவடிக்கை.

வீட்டிலேதான் அவங்க கேக்கிற கேள்விகளை சமாளிக்க முடியலே. கம்பெனி போர்ட் மீட்டிங்கிலுமா என்று தயங்குகிறார்களா?

மது விற்பவர்கள், குடிப்பவர்களைத் துடைப்பத்தால் விளாச பீகாரில் மகளிர் பஞ்சாயத்து முடிவு.

ஊறுகாய், வடை, சில்லி சிக்கன்னு சைட் டிஷ் விற்பவர்களும் இந்தத் தாக்குதலில் அடி பெறுவார்களா?

டிபன் பாக்ஸை சக ஊழியர் விளையாட்டாக ஒளித்து வைத்ததால் மூண்ட கைகலப்பில் ஒருவர் அடித்துக் கொலை.

A hungry man is an angry man! ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க?

200 பயணிகளுடன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், உள்ளே ஓடிய எலியால் தரை இறங்கியது.

இனி விமானம் கிளம்பும்முன் ஒரு பூனையை  CAT-SCAN செய்ய வைத்து எலிகளை விரட்டலாமே.

எமன் வேடமணிந்த ஒருவர், மும்பை சர்ச்கேட் ரயில் நிலையத்தில் விதிகளை மீறினால் மரணம் உண்டாகும் என்று பிரசாரம் செய்கிறாராம்.

நிஜ எமனுக்கே பெப்ப்பே காட்டும் தில் உடையவர்கள், இதனால் திருந்தப் போகிறார்களா?

சீனா, தென் கொரியாவுக்கு தெரு நாய்களை ஏற்றுமதி செய்ய எர்ணாகுள ஊராட்சி முடிவு.

நாய்களை விற்ற காசு மலையாளிகளுக்கு கசக்காது போலிருக்கு!

அரசு ஊழியரை அறைவது சிறிய குற்றமாம் — கோவா துணை முதல்வர்.

மறு கன்னத்தைக் காட்டாததுதான் பெரிய குற்றம் என்பாரா?

விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் பிறர் பார்க்கும்படி காட்டிக் கொண்டிருந்த அமைச்சருக்கு மோடி எச்சரிக்கை.

அதில் தொங்கியிருந்த price tag-ஐ எடுக்க மறந்துவிட்டாரா?

ஓடையில் முதலையைக் கரண்டியால் அடித்துத் தப்பிய ஒடிசா பெண்மணி.

புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப் பெண்மணியின் அடுத்த ஜென்மப் பிறவியாக இருப்பாரோ?

ஹெல்மெட் அணிவதின் அவசியம் தெரிந்தும் சிலர் அணிவதில்லை.

ஏற்கனவே தலைகனம். கூடுதல் கனத்தைத் தாங்க மறுக்கிறார்களா?

நியூயார்க் பத்திரிகையின் அட்டையில் அமெரிக்க காமெடியன் பில் காஸ்பியால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான 35 பெண்களின் படம் வெளியாகி இருக்கிறது.

அதைப் பார்த்த பில் கிளின்டன் குஷியுடன் ‘அது!’ என்று பாராட்டினாரா?

காட்டில் ஒரு வாரமிருந்து திரும்பி வந்த பெல்ஜிய இளைஞர் மனைவியின் விவாகரத்து மனுவால் காட்டில் நிரந்தரமாக வாழச் சென்றுவிட்டாராம்.

வீடு வாவா என்று அழைக்காதலால் காடு வாவா என்று அழைத்துவிட்டதா?

லண்டன் ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் ஸ்டேஷன், ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் வாடகை வசூலிக்கும் சொகுசு ஹோட்டலாக மாறுகிறதாம்.

இவ்வளவு வாடகை கொடுத்து படுத்தால் தூக்கம் வருமா?

ருமேனியா நாட்டு சங்கீத விழாவைக் காண அனுமதி, ரத்த தானம் மூலமாகத் தானாம்.

டிராகுலா, ரத்தக் காட்டேரி, அட்டைகளுக்கு அனுமதி உண்டா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.