பகுதி-25 டமால்... டுமீல்...
செங்கோட்டையில் மோடி கொடியேற்றும் சுதந்தர தின விழாவில் அரசு அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள ஆணை.
செங்கோட்டையில் மோடி கொடியேற்றும் சுதந்தர தின விழாவில் அரசு அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள ஆணை.
வந்தால் மிட்டாய், வராவிட்டால் முட்டி போடணுமா?
***
இந்திய வெள்ளி நகை, கலைப் பொருள்களுக்கு வெளிநாட்டில் மவுசு.
வெளிநாட்டவர்க்கு இந்தியா வெள்ளி நாடா?
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி ரூ. 4000 கோடி செலவழித்ததாம்.
’இதைக் குடிசைத் தொழிலாக சீப்பா செய்து தருவோமே’ என்று சிலர் கருதலாம்.
ஹாங்காங்கில் போலீஸைக் கண்டித்து ஆண்கள் பிரா அணிந்து மறியல்.
கச்சை கட்டிக்கொண்டு போராடினார்களா?
பல் மருத்துவரான மாயா, ‘ஜின்’ திகில் படத்தின் கதாநாயகியாம்.
ஆடியன்ஸை ‘ஆ’ என்று 32 பற்கள் தெரிய வாயைப் பிளந்து பார்க்க வைப்பாரா?
பக்தர்களுக்கு முத்தம் தந்து ஆசிர்வதிக்கும் சந்நியாசினி ராதேமா மினி ஸ்கர்ட்டில் வருவதால் சர்ச்சை.
முற்றும் துறந்தவராக மாறாமல் இருந்தால் சரி.
அழகிய பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் — ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி.
என்னது? என்று கறுவி அவர் மனைவி சப்பாத்திக் கட்டையை எடுக்கலாம்.
மும்பை ரயில்களில் பிரசாரம் செய்து பாட 3000 பிச்சைக்காரர்களுக்குப் பயிற்சி.
அரசு போட்ட பிச்சை என்று அவர்கள் உருக்கமாகப் பாடலாம்.
திருப்பதி பெருமாள் பெயரில் டிமேட் கணக்கு தொடக்கம்.
பங்குகளின் விலை விவரங்கள் அர்ச்சகர்களால் தினம் படித்துக் காட்டப்படுமா?
****
பீகாரில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட விரும்புவரின் வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டுமாம்.
மற்ற கடன்களைப் பற்றி கவலைப்படலாமே தவிர காலைக் கடன்களுக்குக் கூடாது என்றுதானே?
ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரி சுரங்க அமைப்பால் பல்லிகளுக்கும் பாம்புகளுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் தடை.
ஏணியால் சர்ரென்று மேலே ஏறிக் கொண்டிருந்தவரை பாம்பு இறக்கி விட்டுவிட்டதா.
லக்னோ பெண்மணியின் வலது சிறுநீரகம் மார்பில் இருக்கும் அதிசயம்.
பிகாஸோவின் சித்திரங்களில்தானே இம்மாதிரி இடமாற்றங்கள் இருக்கும்?
ராகுல் ஆட்சிக்கு வந்தால் மும்மாரி மழை பெய்யும் — இளங்கோவன்.
எங்கே? அவர்கள் காட்டிலிலேதானே?
டெல்லியில் மீண்டும் டிராம் வண்டி வருகிறதாம்.
இந்தச் சேவை நத்தை, ஆமை வேகத்தில் ஊர்ந்து மெள்ள வரலாம்.
ஒட்டகச் சிவிங்கியை ஜாலிக்குக் கொன்ற அமெரிக்கப் பெண்ணுக்குக் கண்டனம்.
’என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே?’ என்றா?
கொல்கத்தா உயிரியல் பூங்காவில் உள்ள இளம் ஆண் புலி விஷால், ‘வயாகரா’வுக்குப் பிறகும் பெண் புலியை அண்டுவதில்லையாம்.
கர்ஜனையில் புலி. காதலில் எலியா?
விமானத்தில் பணிபுரிபவர்கள் ஆல்கஹால் கலந்திருக்கும் மௌத் வாஷ், ஜெல் உபயோகிக்கத் தடை.
இதைக் கண்டித்து வாயைத் திறப்பதற்கும் தடையா?
காரசாரமான உணவை உண்டுவந்தால் மரணம் தள்ளிப் போகுமாம் — லண்டன் ஆராய்ச்சி.
குறிப்பாக நாக்கு செத்துப் போகாமல் இருக்கும்.