முகப்பு
டமால்… டுமீல்

பகுதி-21 டமால்... டுமீல்...

விடுமுறை அன்று சென்னை மெட்ரோ ரயிலில் மெரினாவைப் போல ஜனத்திரள்.கைமுறுக்கு, சுண்டல், மிளகாய் பஜ்ஜிகளும் நுழைந்திடுமா?

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:


விடுமுறை அன்று சென்னை மெட்ரோ ரயிலில் மெரினாவைப் போல ஜனத்திரள்.

கைமுறுக்கு, சுண்டல், மிளகாய் பஜ்ஜிகளும்  நுழைந்திடுமா?

***

4 வயது சிறுவனை இளைஞர்கள் மது அருந்த வைத்த கொடூரம்.

இளமையில் ‘கள்’ என்று தவறாகப் படித்து புரிந்துகொண்டார்களா?

தான்சானியாவில் ஈக்களுக்குப் பயந்து15 அடி உயர மரத்தின் மேல் ஏறித் தூங்கிய பெண் சிங்கங்கள்.

சிங்கத்தின் மறு பெயர் கேசரி என்பதால் ஈக்கள் மொய்த்திருக்கும்!

பூனையின் சிறுநீர் வாசனைக்குப் பழகிய எலிகள், பூனைகளிடமிருந்து தப்ப முடியாதாம் — ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி.

சிறுநீரில் எலிகளுக்கான சொக்குப்பொடி இருப்பதைக் கண்டறிந்தார்களா?

பறக்கும் கழுகின் மேல் உட்கார்ந்து சவாரி செய்த காகம்!

காகங்களும் டூவீலரில் லிஃப்ட் கேட்கும் மனிதர்களாக மாறுகின்றனவா?

மேட்ரிமோனியல் விளம்பரங்களில் ஆதார் எண் தரவேண்டி வருமாம்.

ஆதாருக்காக காத்திருந்தால் அறுபதாம் கல்யாணம்தான் நடைபெறும்.

*** 

கொல்கத்தாவில் அரசியல்வாதியின் நாய்க்கு டயாலிசிஸ் சிகிச்சை!

இது நாய் அல்ல. ராஜா வீட்டு கன்னுக் குட்டி!

தன்  காரை ‘ஓவர் டேக்’ செய்ததால் லாரியில் இருந்த எருமைகளை விடுவித்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ.

ஆமை வேக ஸ்பீடு லிமிட்டை எருமைகள் தாண்டலாமா?

****

கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை தீர திருப்புவனம் கோவில் கிராதியில் பூட்டைத் தொங்கவிடுகிறார்களாம்.

அட! வாய்க்கு அவ்வப்போது  பூட்டுக் போட்டுக் கொண்டால் கோயிலுக்குள் பூட்டு போட வேண்டாமே..

சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உணவு இடைவேளையில் வழக்கறிஞர்கள் சிக்கன் பிரியாணி விற்கிறார்களாம்.

‘வாய்தா’ கேட்பதுடன், ‘வாய்க்கு தா!’ என்று கேட்கும் என்.வி. கட்சிக்காரர்களுக்குச் செய்யும் சேவையா?

***

தென் ஆப்பிரிக்க மதபோதகர் ஒருவர் இளம் பெண்ணின் தலைமுடியைப் பிடுங்கி எடுத்துச் சாப்பிடுகிறாராம்.

இதிலென்ன அதிசயம்? என் மனைவியின் சமையலில் கிடைக்கும் ‘கொத்தமல்லி’ என் வாய்க்குள் அடிக்கடி போகுமே என்று ஒருவர் சலித்துக்கொள்கிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மோடியின் கெடுபிடிக்கு அஞ்சி டெல்லியிலிருந்து சொந்த மாநிலத்துக்கு மாறத் துடிக்கிறார்களாம்.

டில்லியில் அலுவலக ‘அச்சே தின்’ காலையிலிருந்து தொடங்கி நடுநிசி வரை நீண்டுவிடுவதால் இருக்கும்.

அனகாபுத்தூரில் மது அருந்தி வகுப்பறைக்குள் வாந்தி எடுத்த மாணவர்களுக்குக் கடும் எச்சரிக்கை.

பாடங்களை உருப்போட்டு பரீட்சையில் வாந்தி எடுப்பதுதானே மாணவர்களுக்கு அழகு.

உ..பி.யில் ரயிலை நிறுத்தி சந்தையிலிருந்து காய்கறி வாங்கிய இஞ்சின் டிரைவர்.

ரிடர்ன் டிரிப்பில், மனைவி நிராகரித்த கறிகாய்களைத் திருப்பிக் கொடுக்க மறுபடியும் ரயிலை நிறுத்தினாரா?

மதுரையில் ரேக்ளா குதிரை வண்டியை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

குதிரை வண்டிக்கு ஹார்ஸ் பவர் உண்டென்றும் குதிரை கீழே தள்ளி குழியையும் பறிக்கலாம் என்பதாலும் இருக்கலாம்.

ஜப்பானில் சருமம் பளபளக்க நூடுல்ஸ் குளியல் எடுக்கிறார்களாம்.

அப்படியா? நம்மூர் மாதிரி நூடுல்ஸ்களுக்கு இன்னும் தலை முழுக வில்லையா?

ஒற்றைக் காலில் ஆடாமல் நிற்கக் கூடிய ஆண்கள் இரட்டைக் காலில் நிற்பவர்களை விட மண வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பார்களாம் - ஆராய்ச்சி.

இம்மாதிரி வெத்து வேட்டு ஆராய்ச்சிகளை யாரேனும் நிற்க வைக்க மாட்டார்களா?

மீரட்டில் பாலியல் அத்துமீறல் செய்த பல் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மாணவிகள் தர்ம அடி.

இனிமேல் பல்லைக் காட்டி இளிக்க முடியாமல் 32 பற்களையும் பேர்த்துவிட்டார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.