முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (03.09.1977) - போனஸ் அவசரச் சட்டம் - மத்திய அரசு பிரகடனம்

ஒரு தொழில் நிறுவனத்தில் லாபம் இருந்தாலும், நஷ்டம் இருந்தாலும், ஒரு தொழிலாளருக்கு அவருடைய மொத்த ஊதியத்தில் 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் வழங்கப்பட வேண்டும். இதற்கு வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

Updated On : 2 செப்டம்பர் 2015, 4:59 pm IST
பகிர்:

ஒரு தொழில் நிறுவனத்தில் லாபம் இருந்தாலும், நஷ்டம் இருந்தாலும், ஒரு தொழிலாளருக்கு அவருடைய மொத்த ஊதியத்தில் 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் வழங்கப்பட வேண்டும். இதற்கு வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

நலிந்த நிலையில் உள்ள நிறுவனங்கள், சொற்ப லாகத்துடன் இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மூலச் சட்டத்தில் உள்ள ஷரத்துக்கு உட்பட்டு போனஸ் கொடுக்கப்பட வேண்டும்.

1977-ம் ஆண்டு போனஸ் பட்டுவாடா (திருத்த) அவசரச் சட்டம் என்று இந்த அவசரச் சட்டத்துக்குப் பெயர். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

Advertisement

Advertisement

குறைந்தபட்ச போனஸ் தொகை 8.33 சதவீதம். அதிகபட்ச போனஸ் 20 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று அவசரச் சட்டம் கூறுகிறது.

இந்த அவசரச் சட்டம், போனஸ் பற்றிய மூலச்சட்டம் அமலான எந்த ஒரு தொழிற்சாலை அல்லது மற்ற நிறுவனத்துக்கும் அமலாகும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது.

ஒரு பாங்கிங் கம்பெனிக்கும் இந்திய தொழில் புனர் நிர்மாணக் கார்ப்பரேஷனுக்கும் இச் சட்டம் பொருந்தும்.

நலிவுற்ற மற்றும் கட்டுபடியாகின்ற நிலையை எட்டாது தத்தளிக்கின்ற நிறுவனங்களுக்கு போனஸ் சட்டத்தில் இருந்து விலக்கு அளிப்பது சம்பந்தமாக அரசாங்கம் தனியாக வழிகாட்டும் குறிப்புகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் திறன் அடிப்படையிலான போனஸ் விஷயத்திலும் தொழிலாளருக்கு குறைந்த பட்சம் 8.33 சதவீதம் அளிக்கப்பட வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இப்போதைய அவசரச் சட்டம், மூல சட்டத்தின் 34-வது ஷரத்துக்குப் பதில் புதிய ஷரத்தைச் சேர்த்துள்ளது.

இதன்படி, போனஸ் சட்டத்தில்  கூறப்பட்டுள்ள ஏற்பாட்டில் இருந்து மாறுபட்ட அடிப்படையில் போனஸ் பெற ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு வகையைச் சேர்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள், நிர்வாகத்துடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம். எனினும், அவ்வித ஒப்பந்தம் தகுந்த அரசின் முன் அனுமதியின்றி செய்துகொள்ளப் படாவிட்டால் அது செல்லாது.

அதே நேரத்தில், தங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் வேண்டாம் என்று தொழிலாளர்கள் குறைந்தபட்ச போனஸ் உரிமையை விட்டுக்கொடுக்கிற வகையில் அந்த ஒப்பந்தத்தில் ஷரத்து இருக்குமானால் அந்த ஷரத்து செல்லாது.

தவிர, இவ்விதம் தனியே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனத் துக்குக் கணக்கு ஆண்டில் போனஸுக்கு ஒதுக்கக்கூடிய தொகை இல்லாவிடில் ஊழியர்கள் 8.33 சதவீத போனஸுக்கு மேல் பெற முடியாது.

தவிரவும், இவ்விதம் தனியே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்தாலும் சரி, அந் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகபட்சமாக 20 சதவீதத்துக்கு மேல் போனஸ் பெற முடியாது என்று இந்த ஷரத்தின் கீழ் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச போனஸ் பற்றி மத்திய அரசு ஏற்கெனவே தனது முடிவுகளை அறிவித் துள்ளது. இது சம்பந்தமாக போனஸ் சட்டத்தை திருத்தி அவசரச் சட்டம் போடப்படும் என்று அப்போது மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி அவசரச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.