முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (04.09.1978) - மக்கள் நலன் காக்க பத்திரிகைச் சுதந்தரம் பயன்பட வேண்டும் - ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி

பயன்படுத்துவோரைப் பொறுத்துத்தான் பத்திரிகை சுதந்தரம் என்பதற்குப் பொருள் காண முடியும் என்று ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி கூறினார்.

Updated On : 2 செப்டம்பர் 2015, 5:02 pm IST
பகிர்:

பயன்படுத்துவோரைப் பொறுத்துத்தான் பத்திரிகை சுதந்தரம் என்பதற்குப் பொருள் காண முடியும் என்று ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி கூறினார்.

ஹிந்து பத்திரிகையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை அவர் துவக்கி வைத்து அவர் பேசியதாவது -

மற்ற துறைகளின் சுதந்தரம் போலவே பத்திரிகைத் துறையின் சுதந்தரம் அமைகின்றது என்றாலும், அதனைப் பயன்படுத்துவோரைப் பொறுத்துத்தான் அதற்குப் பொருள் காண முடியும்.

Advertisement

Advertisement

வல்லமை படைத்த பத்திரிகைத் துறைக்கு நன்மை செய்யவோ, தீமை புரியவோ சக்தி இருக்கிறது. எனினும், பொது வாழ்க்கையில் வெறுக்கத்தக்க நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தி வெளியிடுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், அதேசமயத்தில் பத்திரிகை களில் பயன் அற்றுப்போகும் விதத்தில் அதிகாரவர்க்கத்தின் கட்டுக்கு அடங்கி நடப்பதும் கூடாது.

சுதந்தரமான பத்திரிகைகளின் சேவை ஜனநாயகத்துக்குத் தேவை. கடும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பத்திரிகைகளில் வெளியிடும்போது, ஒருதலைப்பட்சமாக இல்லாதிருப்பது கடினமான காரியம் என்றபோதிலும், தேசிய மாறுதல்களில் முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிகைகள், சம்பவங்களோடு தங்களைப் பிணைத்துக்கொள்ளாமல் பார்வையாளர் என்ற முறையிலும் இருக்கவேண்டி இருக்கிறது.

இந்த இரண்டு அம்சங்களும் பத்திரிகைகளுக்குப் பெருஞ்சோதனையாகும். யாரைப் பற்றி செய்தி வருகிறதோ அவருக்கும் பத்திரிகையாளருக்கும் மோதல் ஏற்படுவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாகும்.

மாறிவரும் சமுதாயத்தில் அதிகரித்துவரும் கெடுபிடி நிலையில், பலமிக்க நேர்மையான வழிகாட்டிகள் இல்லாது போனால், பத்திரிகைகளின் பொறுப்பு அதிகரித்து பொது மக்கள் கருத்தையும் உருவாக்கவேண்டி இருக்கிறது.

கிராமப்புற மக்களின் பிரச்னைகள் பற்றியும் அவர்களது தேவை குறித்தும் பத்திரிகைகள் ஆராய்ந்து வன்மையான எழுத்துகள் மூலம் அவற்றை வெளியிட வேண்டும். பிரிவினை மனப்பான்மை, வறுமை ஆகியவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்துப் பத்திரிகைகள் முன்னோடியாகச் செயல்பட வேண்டும்.

பத்திரிகை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, பொதுச் சேவையும் ஆகும். இக்காலத்தில் ஒரு பத்திரிகை நிறுவனத்தின் உண்மையான வெற்றிக்கு அதன் மிகுதியான பத்திரிகை விநியோகமோ, பெரிய வியாபாரமோ காரணம் இல்ல. பொது மக்கள் நலனைக் காப்பதிலும், அதற்காக சுதந்தரத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு பத்திரிகை எந்த அளவுக்கு முன் வருகிறதோ அதைப் பொறுத்துத்தான் அதன் வெற்றியும் அமையும்.

பத்திரிகைச் சுதந்தரம் என்பது பத்திரிகையாளர் நலனுக்காக மட்டுமே அல்ல. தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் அது பயன்பட வேண்டும். தேசத்தில் எல்லாமே சுமுகமாகவும், சிக்கல் ஏதுவுமின்றியும் நடைபெற்று வரும்போது மட்டும் பத்திரிகைச் சுதந்தரத்தின்பால் நம்பிக்கை வைப்பது என்பது சரியல்ல. நெருக்கடி நேரத்திலும் பத்திரிகைச் சுதந்தரத்தில் நம்பிக்கை வைத்துச் செயல்படுவதும் முக்கியமானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.