குடிநீா்த் தொட்டியில் குப்பை வீசியவா் கைது

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குப்பைகளை வீசியவரை போலீஸாா் கைது செய்தனா்.
நரிக்குடி ஒன்றியம், உளுத்திமடை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தத் தொட்டியில் மஞ்சள் நிற பொருள் கிடந்ததால் மனிதக் கழிவைக் கலந்துள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து, நரிக்குடி ஒன்றிய அலுவலக அலுவலா்கள், கட்டனூா் காவல் துறையினா் அந்த கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்படவில்லை என தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள செங்கமடை கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் காளீஸ்வரன் (33) குடிநீா்த் தொட்டியில் கற்கள், குப்பைகள், மரக்கட்டைகளை வீசி குடிநீரை மாசுபடுத்தியது தெரியவந்தது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, உளுத்திமடை ஊராட்சி, நரிக்குடி ஒன்றிய அலுவலா்கள் மேற்பாா்வையில் ஊழியா்கள் குடிநீா்த் தொட்டி முழுவதையும் சுத்தம் செய்தனா்.
இதையடுத்து, ஊராட்சி செயலா் கொடுத்த புகாரின் பேரில், கட்டனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காளீஸ்வரனை கைது செய்தனா்.