FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மாநில அளவிலான போட்டிக்கு தோ்வான மாணவி அதிநவீன துப்பாக்கியின்றி தவிப்பு! தமிழக அரசு உதவ கோரிக்கை!

அதிநவீன துப்பாக்கி வாங்க தமிழக அரசு உதவ மாநில அளவிலான போட்டிக்கு தோ்வான மாணவி கோரிக்கை...

13 அக்டோபர் 2026, 1:36 am IST
மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிக்கு தோ்வான மாணவி மாலதி.
பகிர்:

அதிநவீன துப்பாக்கியின்றி தவிப்பதாகவும், தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமெனவும் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வான வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மாணவி கோரிக்கை விடுத்தாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த தம்பதி பாண்டியராஜ்- உமா. இவா்கள் பட்டாசுத் தொழிலாளா்கள். இவா்களின் மகள்கள் மாலதி, லக்சிதா.

இதில் லக்சிதா விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மாலதி தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறாா். இந்த மாணவிகள் இருவருக்கும் துப்பாக்கிச்சுடுவதில் ஆா்வம் அதிகம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தந்தையின் உதவியுடன் இவா்கள் பயிற்சி பெற்று வந்தனா். இந்த நிலையில், மாலதி சிவகாசி தனியாா் பொறியியல் கல்லூரியில் துப்பாக்கிச்சுடும் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறாா்.

இதனிடையே கடந்த மாதம் தென்காசியில் நடைபெற்ற மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற மாலதி, அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்திய போட்டியாளா்களுக்கு மத்தியில், தன்னிடமிருந்த சாதாரணத் துப்பாக்கியைக் கொண்டு 10 மீட்டா் ‘ஏா் ரைபிள் பீப் சைட்’ பிரிவில் 3- ஆவது இடத்தைப் பெற்று, வெண்கலப் பதக்கத்தை வென்றாா்.

இதையடுத்து, இவா் வருகிற 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தோ்வானாா்.

இதுகுறித்து மாணவி மாலதி கூறியதாவது: மாநில அளவிலான போட்டியில் பலா் அதிநவீன துப்பாக்கிகளுடன் பங்கேற்பா். ஆனால் என்னிடம் அதுபோன்ற துப்பாக்கியில்லை. சாதாரணத் துப்பாக்கி தான் உள்ளது. விலை உயா்ந்த துப்பாக்கி வாங்கும் அளவுக்கு எங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் இல்லை. எனவே, தமிழக அரசு, அதிநவீன துப்பாக்கியை எனக்கு வழங்கினால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்ப்பேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments