157 ஆண்டுகளுக்கு முந்தைய ரயில் என்ஜின்!
1853ம் ஆண்டு ஏப்ரல் 16-ம்தேதி, 14 ரயில் பெட்டிகளில் 400 விருந்தினர் பயணிகளை ஏற்றிக்கொண்டு, போர்பந்தரில் இருந்து தாணே-வுக்கு மாலை 3 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற ரயில் தான் இந்தியாவின் முதல் பயணிகள் ரய
1853ம் ஆண்டு ஏப்ரல் 16-ம்தேதி, 14 ரயில் பெட்டிகளில் 400 விருந்தினர் பயணிகளை ஏற்றிக்கொண்டு, போர்பந்தரில் இருந்து தாணே-வுக்கு மாலை 3 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற ரயில் தான் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.
157 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த ரயிலை, இயக்கியவர்கள், அதில் பயணம் செய்தவர்கள் யாருமே இன்று உயிருடன் இல்லை. ஆனால் அந்த ரயில் என்ஜின் இன்னும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது- தண்டவாளத்தில் அல்ல; தில்லி ரயில் அருங்காட்சியத்தில்.
""இப்போதும் ஆண்டுதோறும் அதைச் சிறிது தூரம் ஓட்டிச்சென்று, இயங்கும் நிலையிலேயே வைத்திருக்கிறோம்'' என்கிறார் தில்லி தேசிய ரயில் அருங்காட்சியகத்தின் இயக்குநர் மணீஷ் ஜெயின்.
""தில்லி சாணக்கியபுரி சாந்தி மார்க்கத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ரயில் அருங்காட்சியகத்திற்கு, ஆண்டுதோறும் வருகை தருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் மேல்.. புதுதில்லியில் குடியரசுத் தினவிழாவிற்குப்பின், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக எண்ணிக்கையில் வருகை தருவது இங்கேதான்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 1}ம்தேதி தேசிய ரயில் அருங்காட்சியக நாளாகக் கொண்டாடப்படுகிறது.கொல்கத்தா,மைசூர்,சென்னை,நாக்பூர் ஆகிய இடங்களில் மண்டல ரயில் அருங்காட்சியகங்கள் இருந்தாலும், 70-க்கும் மேற்பட்ட மிகப்பழமையான ரயில் என்ஜின்களும், ரயில் பெட்டிகளும்,சிக்னல்களும், ரயில்வே தொடர்பான அனைத்துப் பழமையான பொருள்களும் இங்கு தான் இடம்பெற்றுள்ளன. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்குழந்தைகளும்,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா வரும் பயணிகளும் வருகை தருகின்றனர்.
1853 முதல் ரயில்வேத்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், அதன் மூலம் பெற்றுள்ள வியக்கத்தக்க வளர்ச்சியையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட நாள்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ஒலி, ஒளிக் கண்காட்சி நடத்தப்படுகின்றது.
இந்தியாவில் ரயில்வே போக்குவரத்துத்தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை முதன் முதலில் 1832ல் சென்னையில் தான் நடைபெற்றது.கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் நடத்திய வர்த்தக வளர்ச்சிக் கூட்டத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கினால் வணிகத்தைப் பெருக்கலாம் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.அதைத் தொடர்ந்து 1844ல் கிழக்கிந்திய ரயில்வே மற்றும் கிரேட் இந்திய தீபகற்ப ரயில்வே கம்பெனிகள் தொடங்கப்பட்டன.1847 முதல் 1856 வரை வைஸ்ராயாக இருந்த டல்ஹவுஸ் பிரபு ரயில் போக்குவரத்துக் கட்டுமானப்பணிகளில் அதிக கவனம் செலுத்தினார்.
சென்னையில் 1856, ஜுலை 1ம்தேதி, வியாசர்பாடி முதல் வாலாஜா ரோடு வரை முதல் பயணிகள் ரயிலை இயக்கியது மெட்ராஸ் கியாரண்டிட் ரயில்வே கம்பெனி.
இன்று நாள் தோறும் 1.48 கோடி பயணிகளை 17,395 ரயில்கள் ஏற்றிக் கொண்டு செல்கின்றன. 63 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் சேவை அளிக்கப்படுகிறது.
இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இந்தியாவெங்கும் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தியதால்,தேசவிடுதலைப் போராட்டத்தில் ரயில்வேத் துறைக்கும் பாராட்டத்தக்க பங்களிப்பு உண்டு.
""ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேசிய ரயில் அருங்காட்சியகத்தைக் காண வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப்போட்டி தில்லியில் நடைபெறுவதையொட்டி, இங்கு புதிதாக ஒலி, ஒளி கண்காட்சி, உள்ளரங்க ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்து வருகின்றோம்.இங்கு வருகை தரும் பயணிகளுக்கு உதவஇரு வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பெரியவர்களுக்கு ரூ10ம், குழந்தைகளுக்கு ரூ3ம் அனுமதிக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.தில்லி தேசிய அருங்காட்சியகமும்,கொல்கத்தா, சென்னை, மைசூர் மற்றும் நாக்பூரில் அமைந்துள்ள பிராந்திய ரயில் அருங்காட்சியகங்களும் ரயில்வேஅமைச்சகத்தின் பராமரிப்பில் உள்ளன என்றாலும்கூட தில்லி ரயில் அருங்காட்சியம் தனித்துவமானது'' என்றார் மணீஸ் ஜெயின்.
தேசிய ரயில் அருங்காட்சியகம் பற்றிய விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள ஆங்கிலம், ஹிந்தி இருமொழிகளில் மட்டுமே விவரக் குறிப்புகள் உள்ளன. மாநில மொழிகளிலும் விவரக் குறிப்புகள் தயாரித்து, வருகை தரும் மாணவர்களின் தாய்மொழிக்கேற்ப அவற்றை வழங்கினால், மாணவர்கள் ஒவ்வொன்றையும் புரிதலுடனும் ஊக்கத்துடனும் காட்சிப் பொருள்களைக் கண்டுகளிக்க உதவும்.
ராஜாக்கள் பயணம் செய்த சிறப்பு ரயில் பெட்டிகள், பல்வேறு ரயில் என்ஜின்கள், ஒலி, ஒளிக் காட்சிகள், குட்டி ரயிலில் ஒருமுறை சுற்று வரல் என எல்லாவற்றுக்கும் ஒரு நாள் போதாது. 157 ஆண்டு கால வரலாற்றை அத்தனை எளிதில் கடந்து வந்துவிட முடிவதில்லை.
படங்கள்-ப.ராதாகிருஷ்ணன்