FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

அவியல்

அனைவருக்கும் ஆலயப்பிரவேசம் அளித்த இந்தியாவின் முதல் ஆலயம்! மகாத்மா காந்தி 1924-ம் ஆண்டு திருவனந்தபுரம் வந்திருந்தார். அப்போது மகாராஜா சித்திரைத் திருநாள் இளைய வயதினராக இருந்ததால் அவரது தாயார் அரசரின்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:
அனைவருக்கும் ஆலயப்பிரவேசம் அளித்த இந்தியாவின் முதல் ஆலயம்!

மகாத்மா காந்தி 1924-ம் ஆண்டு திருவனந்தபுரம் வந்திருந்தார். அப்போது மகாராஜா சித்திரைத் திருநாள் இளைய வயதினராக இருந்ததால் அவரது தாயார் அரசரின் பிரதிநிதியாகப் பதவி வகித்து வந்தார்.

மகாராணி எளிய உடையில் இருப்பதைப் பார்த்து வியந்த காந்தி அவரிடம் ""வைக்கம் ஆலயத்தில் ஒரு பூனையோ, நாயோ, ஏன் ஒரு பசு கூட நடந்து செல்ல முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது'' என்று கேட்டார். மகாராணி அதற்குப் பதிலை இளவரசர் சித்திரைத் திருநாளைக் கேட்குமாறு கூறினார்.

இளவரசைப் பார்த்த காந்தி ""நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு அனைவரையும் ஆலயப்பிரவேசம் செல்ல அனுமதிப்பீர்களா?'' என்று கேட்க, ""செய்வேன்'' என்றார் இளவரசர்.

Advertisement

Advertisement

பின்னர் 1931-ல் இளவரசர் மகாராஜா சித்திரைத் திருநாளாகப் பதவி ஏற்றார். 1936-ம் ஆண்டில் அனைவரும் ஆலயத்தில் நுழையலாம் என்று அனுமதி அளித்தார் இளவரசர். இந்தியாவின் விடுதலைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே அனைவருக்கும் ஆலயத்தில் நுழைய அனுமதி அளித்த முதல் கோயில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலாகத்தான் இருக்க வேண்டும். இந்த நிகழ்வைக் கண்டு நெகிழ்ந்துபோன காந்தி "நவீன கால அசோகர்' என்று சித்திரைத் திருநாள் மகாராஜாவைப் பாராட்டினார்.

-ராம்குமார்

கட்டில் ரகசியங்கள்!

* உறங்கும் கட்டிலை உறங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். அதன் மீது உட்கார்ந்து சாப்பிடுவது, லேப்-டாப், செல்போன், புத்தகங்கள் போன்றவற்றை கட்டிலில் இருந்து விலக்கி வையுங்கள்.

* டி.வி.யை படுக்கை அறையில் இருந்து வேறு அறைக்கு மாற்றிவிடுங்கள்.

* உறங்கும்போது உடல் அதிக உஷ்ணத்துடன் இருக்கக்கூடாது.உஷ்ணத்தைத் தணிக்க, ஜன்னல்களைத் திறந்து, காற்றோட்டமாக வையுங்கள்.

* சூரிய ஒளியை கடத்தும் திரைச்சீலையை ஜன்னலில் பயன்படுத்துங்கள். காலையில் வெயில் வந்ததும் இயற்கை உங்களை எழுப்புவதே நல்லது. கடிகார அலாரம் அடிக்கும்போது பதறி எழுவது நல்லதல்ல.

* கட்டில் விரிப்பை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்றுங்கள். ஏனென்றால் நாம் உறங்கும்போது இறந்த செல்கள் உடலிலிருந்து உதிரும்.

* குறித்த நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். இதுதான் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியம்.

-ருஜூதா திவாகர் எழுதிய "விமன் அன் த வெயிட் லாஸ் தமாஷா' என்ற புத்தகத்திலிருந்து

 - ஜெனி ஃப்ரீடா

எரிவாயுவை சேமிக்க சில வழிகள்

* ஒரு பர்னரை தேவையின்றி வெகு நேரம் எரிய விடுவதன் மூலம் 135 கிராம் எரிவாயு செலவாகிறது.

* பொருள்கள் கொதிநிலையை அடைந்தவுடன் தீயை குறைத்து வைப்பதன் மூலம் 35 சதவீதம் எரிவாயுவை சேமிக்கலாம். மேலும், பொருள்கள் கொதிநிலையை அடைந்துவிட்டால் சிறு தீயே கொதிப்பதற்கு போதுமானது. திரவப் பொருள்கள் கொதிக்க வைக்கும் சமயங்களில் தீ அதிகமாக இருப்பின் திரவங்கள் ஆவியாகிவிடுமேயன்றி உஷ்ண நிலையை அடையாது.

*  சிறிய பர்னரும் ஒரு வழியில் எரிவாயுவை சேமிக்க உதவுகிறது. சிறிய பர்னரில் சமைப்பதன் மூலம் நேரம் அதிகம் செலவானாலும் அது பெரிய பர்னருக்குத் தேவைப்படும் எரிவாயுவைவிட 6-லிருந்து 10 சதவீதம் வரை குறைந்த அளவு எரிவாயுவைப் பயன்படுத்துகிறது.

* அடுப்பில் வைக்கும் பாத்திரங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம். பாத்திரங்களில் சிறிது தூசி இருந்தாலும் பாத்திரம் சூடாவதற்கு நேரமாகும்.

* பால், இறைச்சி முதலிய பொருள்களை குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து எடுத்து உடனே சமைத்தால் பெருமளவு எரிவாயு செலவாகும். அப்பொருள்கள் மிதமான சூடு வருமளவுக்கு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்த பின்னர் சமைத்தால் எரிவாயு மிச்சமாகும்.

* சமைக்கும்போது பாத்திரங்களை மூடி வைப்பதினால் சூடு பாத்திரத்தினுள்ளே தங்கி பொருள்கள் விரைவில் சூடாகும்.

* பர்னர்களை அவ்வப்போது சுத்தப்படுத்தி வையுங்கள்.

 - லைலா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments